பெரு நிறுவனங்களின் சிஇஓக்கள் மற்றும் உயர் அதிகாரிகளை குறிவைத்து ‘Boss Scam’ எனப்படும் புதிய சைபர் மோசடி நடந்து வருவதாக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நூதன மோசடியில் ஈடுபடுபவர்கள் RBI அதிகாரிகள் போல் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, நிறுவனங்களின் சிஇஓக்கள் மற்றும் உயர் அதிகாரிகளை மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொள்கின்றனர். பின்னர், Malware கொண்ட கோப்புகளை அனுப்புகின்றனர்.
அந்தக் கோப்புகளை அதிகாரிகள் பதிவிறக்கம் செய்தவுடன், ‘ட்ரோஜன் டிராப்பர்’ (Trojan Dropper) எனப்படும் வைரஸ் கணினியில் நிறுவப்படுகிறது. இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் கணினியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பின்னர், அந்த அதிகாரிகளின் வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) கணக்கைப் பயன்படுத்தி நிதித் துறை ஊழியர்களைத் தொடர்புகொள்கின்றனர்.
தாங்கள்தான் நிறுவனத்தின் ‘பாஸ்’ அல்லது சிஇஓ (CEO) எனக் கூறி, பணத்தை குறிப்பிட்ட சில போலி வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் வரும் அவசர பணப் பரிவர்த்தனை கோரிக்கைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தெரியாத நபர்களிடமிருந்து வரும் கோப்புகளை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யவோ அல்லது சேமிக்கவோ கூடாது. ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள் ஒருபோதும் வாட்ஸ்அப் மூலம் மென்பொருள் புதுப்பிப்புகள் அல்லது பாதுகாப்புத் திருத்தங்களை அனுப்பாது.
.exe மற்றும் .dll போன்ற தெரியாத ஆபத்தான கோப்புகள் வருவதை தடுக்க, அனைத்து நிறுவனங்களும் மென்பொருள் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை (Software Restriction Policies – SRP) அமல்படுத்த வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட ஆன்டி-வைரஸ் மற்றும் மால்வேர் கண்டறியும் மென்பொருள்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஒருவேளை சைபர் மோசடி நடந்தால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ புகார் அளிக்க வேண்டும்.









