சென்னை புறநகர்ப் பகுதியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் திருன்றவூரில் இருக்கும் இருதயாலீஸ்வரரை திங்கட்கிழமைகளில் வழிபட்டால், இருதயம் தொடர்பான நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுக்கிறது. இந்த கோவிலில், சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் நாயனாரின் சிலை இருப்பது தனி சிறப்பாக கூறப்படுகிறது. பூசலார் நாயனார் இறைவனை தன் இதயத்தில் வைத்து பூஜித்து கோயில் கட்டியதால், இதயம் தொடர்பான நோய்களுக்கு இங்கு வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.
கோவில் தோன்றிய வரலாறு
தொண்டை நாட்டில் திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் தோன்றிய பூசலார், சிவபக்தியில் மூழ்கிக் கிடந்தார். ஏழையான இவர், சிவனுக்காக ஒரு திருக்கோயில் கட்டிக் குடமுழுக்கு நீராட்ட விரும்பினார். ஆனால் அதற்கான பொருள் கிடைக்காத காரணத்தால், மனத்திற்குள்ளேயே எல்லாப் பொருள்களையும் கொண்டு சேர்த்துப் பிரதிஷ்டை செய்யும் நாளையும் குறித்தார். அதேநேரத்தில், காஞ்சி மாநகரில் பல்லவ வேந்தன் சிவனுக்காக மாபெரும் கோவில் ஒன்றைக் கட்டி, குடமுழுக்கு நடத்த திட்டமிட்டிருந்தான். ஆனால், சிவபெருமான் அந்த மன்னனின் கனவில் தோன்றி, திருநின்றவூரில் பூசலார் கட்டிய கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு தான் செல்லவேண்டி இருப்பதால், காஞ்சியில் இருக்கும் கோவிலின் குடமுழுக்கு விழாவை வேறொரு நாள் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். இந்த சம்பவம் தொடர்பான பாடல் பூசலார் நாயனார் புராணத்தில் வருகிறது.

“நின்றவூர்ப் பூசல் அன்பன்
நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து நாளை
நாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில் கொண்டருளப் போந்தார்”
சிவபெருமான் கனவில் கூறியதை கேட்ட மன்னன் அதிர்ச்சியடைந்து, காஞ்சியிலிருந்து திருநின்றவூருக்கு சென்றான். அங்கு பூசலார் கட்டிய கோவிலை தேடி அலைந்தான். எங்கு தேடியும் கோவில் இல்லாதால், பூசலாரை தேடி அலைந்தான். ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்த பூசலாரை கண்ட மன்னன், அவரிடம் சென்று, சிவபெருமான் தன் கனவில் தோன்றியதையும், பூசலார் கட்டிய கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு தான் செல்லவிருப்பதாக சிவபெருமான் கூறியதையும் மனம் உருகி பாடினான். மன்னன் கூறியதை கேட்ட பூசலார், தன்னுடைய மனதில் இருக்கும் கோவில் குறித்து விரிவாக சொன்னார்.
“மன்னவன் உரைப்பக் கேட்ட
அன்பர்தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே
எம்பிரான் அருள்செய் தாரேல்
முன்வரு நிதியி லாமை
மனத்தினால் முயன்று கோயில்
இன்னதாம் என்று சிந்தித்து
எடுத்தவா றெடுத்துச் சொன்னார்”
பூசலாரின் சிவபக்தியை கண்ட மன்னன், அவருடன் தங்கி சிலகாலம் சிவதொண்டு செய்ததாகவும், பின்னர் பூசலாரின் விருப்படி ஒரு பெரிய கோவிலை கட்டியதாகவும் பூசலார் நாயனார் புராணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருதயமே சிவனின் ஆலயமாக அமைந்ததால், அக்கோவிலில் இருக்கும் சிவனுக்கு இருதயாலீஸ்வரர் என்ற பெயர் வந்தது. திங்கட்கிழமைகளில் இந்த கோவிலில் தொடர்ந்து வழிபட்டால், சிவனின் அருளால் இருதய நோய் குணமாகும் என்ற நம்பிக்கை நெடுங்காலமாக இருந்துவருகிறது.









