அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டது. சமீபகாலமாக, பழைய தமிழ்ப் பாடல்களை ரீமிக்ஸ் செய்து படங்களில் பயன்படுத்துவது ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது. அதேபோல், 2025 ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித், பிரபு, சிம்ரன், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடலில் இளையராஜா இசையமைத்த ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’ உள்ளிட்ட பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்த பாடல்கள் இளையராஜாவின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதால், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், பாடல்களை நீக்குமாறு அல்லது ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்குமாறு அவர் கேட்டிருந்தார். இந்த நோட்டீஸுக்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், அனுமதி பெற்றுத்தான் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தது. ஆனால், அவர்கள் யாரிடமிருந்து அனுமதி பெற்றார்கள் என்பது குறித்து சரியான பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, நீதிமன்றம் அந்தப் படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தத் தடைவிதித்திருந்தது. ஆனால், மைத்ரி தயாரிப்பு நிறுவனம் அந்த உத்தரவை மீறி பாடல்களைப் பயன்படுத்தியது. இதனால், இளையராஜா மீண்டும் நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, “பாடல்களை நீக்கவில்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என அவரது தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சர்ச்சை பல நாட்களாகத் தொடர்ந்து வந்த நிலையில், கடந்த 2025 மே 8 அன்று இப்படம் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியானது.
இப்படம் வெளியான மூன்று மாதங்களிலிலேயே நெட்ஃபிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் கடும் கோபத்தில் உள்ளனர்.









