பொது

ரூ.500 போதும்… வயலுக்கே வந்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் டிரோன்…

ரூ.500க்கு வயலுக்கே வந்து டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது கோத்தாரி நிறுவனம்.  

தற்போது விவசாயிகள் பெரும்பாலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க ஸ்பிரேயர்களையே பயன்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் டிரோன் பயன்படுத்தப்பட்டாலும் அது பெரும்பாலும் அதிக நிலப் பரப்புடைய எஸ்டேட்டுகளுக்கும் பண்ணைகளுக்குமே பயன்படுத்தப்படுகிறது. இது சிறு விவசாயிகளை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை.

சிறு விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பத்தில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். சரியான நேரத்திற்கு கூலிக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. சில நேரங்களில் ஆட்கள் கிடைத்தாலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்குள் வெயில் அதிகமாகிவிடுகிறது. இது மருந்தின் வீரியத்தை சில நேரம் குறைக்கின்றது. மருந்து தெளிக்கும் போது சில விவசாயிகள் பாம்பு, பூச்சிகளால் கடிபடுவதும் உண்டு. இத்தகைய சிரமங்களைத் தீர்க்க கோத்தாரி நிறுவனம் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.

கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் நிறுவனம் செவ்வாய்கிழமை 30 உயர்திறன் கொண்ட பூச்சிக் கொல்லிகளை அறிமுகம் செய்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜே. ர்ஃபீக் அகமது விவசாயிகள் நேரடியாக பயன்பெரும் வகையில் டிரோன் சேவை வாகன திட்டத்தை அறிமுகம் செய்தார்.

இந்த திட்டத்தின்படி தனது நிலத்தில் உள்ள பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விரும்பும் விவசாயி 90952 90952 என்ற எண்ணிற்கு ஒரு போன் செய்தால் போதும். கோத்தாரி நிறுவனத்தின் அலுவலர் விவசாயியின் இருப்பிடத்தையும், பிற தகவல்களையும் குறித்துக் கொள்வார்.

உடனே அவரது இருப்பிடத்திற்கு கோத்தாரி நிறுவனத்தின் டிரோன் வாகனம் வரும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பூச்சிக்கொல்லி மருந்துகளும் அந்த வாகனத்திலேயே இருக்கும். கூடவே அந்த வாகனத்தில் டிரோனும் அதனை இயக்க டிரோன் பைலட்டும் இருப்பர். விவசாய நிலத்தை அடைந்த 10 நிமிடங்களிலேயே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து விடுவர். இதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.500 கட்டணமாக பெறப்படுகிறது.

Related Posts