நடிகர் ராஜேஷ் (75) மறைவு, தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், அவரது பழைய நேர்காணலில் இருந்து வெளியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

“நான் கார்ல் மார்க்ஸின் கல்லறையை பார்த்ததும், அதைப் போன்ற கல்லறையை எனக்கும் கட்ட வேண்டும் என்று எண்ணினேன். நான் நாற்பதாவது வயதிலேயே எனக்கான கல்லறையை கட்டிவிட்டேன். ஒருவன் அவனுக்கான கல்லறையை தானாகவே கட்டிக்கொண்டால், அவன் நூறு வயது வரை வாழ்வான் என்பது ஒரு பழமொழி.
ஆனால் அது எனது நோக்கம் அல்ல. எனக்குப் பிடித்த கல்லறையில்தான் நான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கட்டினேன்” என அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.
திரையுலக பயணம்
இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ், பிறகு “கன்னிப்பருவத்திலே” படத்தின் மூலம் நாயகனாக தனது பயணத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சத்யா, விருமாண்டி, மகாநதி, அந்த ஏழு நாட்கள், தர்மதுரை போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். நடிகராக மட்டும்மால்லாமல், டும் டும் டும், மஜா, உள்ளம் கேட்குமே போன்ற திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றியுள்ளார்.
கொரோனா காலத்தில், யூட்யூப் வழியாக புத்தக வாசிப்பு, வாழ்வியல் அறிவு, வாழ்க்கை நிகழ்வுகள் – அனைத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

தன் அம்மா, அப்பா, மனைவியின் உடல்களையும் அந்த ஒரே இடத்தில் அடக்கம் செய்து, “குடும்பக் கல்லறை” என்ற கருத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர். அதே இடத்தில்தான் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக, தன் கல்லறையையும் முன்னதாகவே திட்டமிட்டுள்ளார். வாழ்க்கையை ஆழமாக புரிந்த ஒருவர் தன் இறப்பையும் திட்டமிடுவார்; அதற்கு நடிகர் ராஜேஷ் சிறந்த உதாரணம் என அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.








