பொது

கருவை கலைக்க பெண்ணுக்கு உரிமை உண்டு… புது சட்ட திருத்தம் வேண்டும்… டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து!

கருவை சுமக்க விருப்பம் இல்லாத பெண்ணை, கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது அவருடைய உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில், மனைவியை பிரிந்து வாழும் கணவர் ஒருவர், தன்னுடைய மனைவி தனது அனுமதியின்றி 14 வாரக் கருவைக் கலைத்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கருக்கலைப்பு சட்டத்தின் பிரிவு 312-ன் கீழ் அந்தப் பெண் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை, விசாரித்த நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, ஒரு பெண் தனது கர்ப்பத்தைத் தொடர விரும்பாதபோது, அவரை அதற்காகக் கட்டாயப்படுத்துவது அவரது உடல் மீதான உரிமையை பறிப்பதாகும். இது பெண்ணை மன ரீதியான பாதிக்கும். மற்றவர்களின் உதவியின்றி குழந்தையைத் தனியாக வளர்க்கும் பொறுப்பு பெண்ணின் மீதே விழுகிறது. சட்டபூர்வமாக செய்யும் கருக்கலைப்பு குற்றமாகாது. எனவே, கருக்கலைப்பு குறித்து முடிவெடுக்கும் முழு உரிமை அந்தப் பெண்ணிற்கே உண்டு. மன அழுத்தம் காரணமாக கருக்கலைப்பு செய்ததாக அந்த பெண் மருத்துவ ரீதியான காரணத்தை கூறும்போது, அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும், விவாகரத்தான பெண்கள், விதவை பெண்கள் ஆகியோர் கருக்கலைப்பு செய்ய சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டுவர வேண்டுமென தெரிவித்தார்.

இந்திய சட்டம் சொல்வதென்ன?

இந்தியாவை பொறுத்தவரை கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை Medical Termination of Pregnancy (MTP) Act, 1971 மற்றும் அதன் 2021 திருத்தத்தின் மூலம் சட்டபூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் படி, ஒரு பெண் தனது விருப்பத்தின் பேரில் 20 வாரம் வரை ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் அனுமதியுடன் கருக்கலைப்பு செய்யலாம். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுமிகள், மாற்றுத் திறனாளிகள், திருமண நிலை மாற்றம் ஏற்பட்டவர்கள் போன்றோர் 24 வாரம் வரை இரண்டு மருத்துவர்களின் அனுமதியுடன் கருக்கலைப்பு செய்யலாம். 24 வாரங்களுக்கு மேல் கருவில் கடுமையான குறைபாடு இருப்பின், மாநில மருத்துவ குழுவின் ஒப்புதலுடன் கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது.

இந்த உரிமை திருமணமான பெண்களுக்கு மட்டும் அல்ல, திருமணம் செய்யாத பெண்களுக்கும் பொருந்தும்; 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணின் தனிப்பட்ட சம்மதம் மட்டுமே போதுமானது. கணவர் அல்லது குடும்பத்தின் அனுமதி தேவையில்லை. மேலும், பெண்ணின் அடையாளம் மற்றும் மருத்துவ விவரங்கள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். கருக்கலைப்பு என்பதை பெண்ணின் உடல் உரிமை, சுகாதார உரிமை மற்றும் அடிப்படை மனித உரிமையின் ஒரு பகுதியாக இந்தியச் சட்டம் அங்கீகரிக்கிறது.

Related Posts