பொது

மதம் மறக்கச் செய்யும் தர்கா… நாகூரில் நிற்கும் அதிசயம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா மதநல்லிணக்கத்திற்கு சான்றாக இருக்கிறது. இந்த தர்கா நாகூர் ஆண்டவர் எனப்படும் ஹஸ்ரத் மீரான் சுல்தான் சையத் ஷாகுல் ஹமீது என்பவரின் சமாதி மீது கட்டப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூரில் ஷாகுல் ஹமீது பிறந்தார். புகழ்பெற்ற சூஃபி துறவி ஹஸ்ரத் முஹியுதீன் அப்துல்-காதிர் அல்-ஜலானியின் 13 வது தலைமுறை வம்சாவளியைச் சேர்ந்தவர். 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாகூர் ஆண்டவர் இலங்கை, கேரளா, தமிழ்நாடு என பல பகுதிகளுக்கு தன் குழுவுடன் சென்று இஸ்லாம் மதத்தை பரப்பினார். 16 நூற்றாண்டில் தஞ்சாவூர் மன்னர் அச்சுதப்ப நாயக்கருக்கு சூனியத்தால் ஏற்பட்ட உடல் ரீதியான நோயை ஷாகுல் ஹமீது குணப்படுத்தியதாக நம்பப்படுகிறது. அந்த நிகழ்வு குறித்து சில உள்ளூர் புராணக்கதைகள், வரலாற்று நூல்களில் குறிப்பு இருக்கிறது. ஒரு புறாவிலிருந்த சூனிய ஊசியை எடுத்தன் மூலம் அச்சுதப்ப நாயக்கருக்கு ஏற்பட்ட நோயை நாகூர் ஆண்டவர் குணப்படுத்தியதாக நம்பப்படுவதால், தர்காவின் வளாகத்தில் புறாக்களை விடுவிக்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

தர்காவின் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவில் நாகூர் ஆண்டவர் தியானம் செய்த நிலத்தடி குகை இருக்கிறது. நாகூர் தர்காவுக்கு வரும் பக்தர்கள் அங்கும் சென்று வழிபடுகிறார்கள். இந்த தர்காவில் ஹிந்து கோவில்களில் இருப்பது போல நடுவில் ஒரு குளம் இருக்கிறது. அங்கு யாத்திரிகள் புனித நீராடுகிறார்கள். இந்த குளத்தில் குளித்தால் தோல் சம்பந்தமான வியாதிகள் குணமடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல், குழந்தை இல்லாதவர்கள் இந்த குளத்தில் நீராடி தர்காவில் வேண்டிக்கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பலரால் நம்பப்படுகிறது.

இந்த தர்காவில் அதிகாலைத் தொழுகைக்காக பாங் ஒலிக்கப்படுகிறது. தொழுகை முடிந்தபின் பெரிய மினாரா அருகே உள்ள மண்டபத்திலிருந்து ஷெனாய் நாதஸ்வரம் ஒலிக்கப்படும் சிறப்பு வாய்ந்த இடமாக இந்த தர்கா இருக்கிறது. ஆண்டு தோறும் இங்கு நடக்கும் கந்தூரி விழா உலகப் புகழ் பெற்றது. மதங்களைக் கடந்து பலர் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு நாகூர் ஆண்டவரை வழிபடுவார்கள் என்பது தனிச் சிறப்பு.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts