2025 ஐபிஎல் தொடர் ஏன் ரத்து செய்யப்பட்டது ?
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலகில் மிக முக்கியமான கிரிக்கெட் லீக் ஆகக் கருதப்படும் 2025 ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். உலக நாடுகள் எதிர்பார்க்காத விதமாக, மே 7ஆம் தேதி “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஆரம்பமானது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் மே 8ஆம் தேதி பஞ்சாபில் நடத்திய தாக்குதலால், அதே நாளில் நடந்து கொண்டிருந்த பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து அதிகரித்த இந்தியா பாகிஸ்தான் போர்ச் சூழல் காரணமாக 2025 ஐபில் சீசன் 1 வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் 2021-ல் கோவிட்-19 க்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த சீசன் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மிகப்பெரிய பண இழப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இந்த சூழல் நீடித்தால் இதன் தாக்கம் பிசிசிஐ, உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் ஸ்டேடியம் ஆபரேட்டர்கள் என பலருக்கும் ரூ.2,000 கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்படும். அது எப்படி என்று பார்ப்போம்?
பிசிசிஐக்கு ரூ.2,000 கோடி இழப்பு?
ஐபிஎல் தொடர்தான் பிசிசிஐயின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாகும். 2023–27 ஊடக ஒப்பந்தத்தின் படி, ஒரு சீசனுக்கு ரூ. 8,732 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. 74 போட்டிகளில் 17 போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், ஊடக உரிமையில் மட்டும் ரூ. 2,000 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ. 800 கோடி வருவாயானது ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைக்கிறது. இதில் டாடா ரூ. 500 கோடி மற்றும் இதர நிறுவனங்கள் ரூ. 300 கோடி அளிக்கின்றன. இந்த சீசன் பாதியில் நிறுத்தப்பட்டால் இந்த வருவாயில் குறிப்பிட்ட அளவு தொகையை இழக்க நேரிடும்.
விளம்பர வருவாய் முழுவதும் சரிவு

பிரபல டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தளங்கள் ரூ. 4,500 கோடி மதிப்புள்ள விளம்பர ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தன. தொடரை ரத்து செய்தால், ரூ. 2,000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படும் என எலாரா கேபிட்டலின் கரண் தௌரானி தெரிவித்துள்ளார்.
நாம் டிவியில் பார்க்கும் 10 வினாடி விளம்பர ஸ்லாட்டுக்கு ரூ. 28 லட்சம் வரை செலுத்தும் நிறுவனங்கள், அந்த பணத்திற்கு மதிப்பு கிடைக்கவில்லை என்றால் அதை எப்படி நியாயப்படுத்த முடியும்? மீதமுள்ள 16 போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், இவர்கள் கோடிக்கணக்கில் நிதி நெருக்கடியில் சிக்க நேரிடும்.
டிக்கெட் & மைதான இழப்பு
இந்த சீசன் தொடங்கியதிலிருந்தே டிக்கெட் விற்பனை பெரிதும் சூடுபிடிக்கத் தொடங்கியது. குறிப்பாக சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி போன்ற அணிகளின் போட்டிகளில், டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் மூன்று மடங்கு விலையில் விற்றாலும், ரசிகர்கள் ஆர்வத்துடன் வாங்கியதைக் காணலாம். ஒவ்வொரு ஐபிஎல் போட்டி மைதானமும் 30,000 முதல் 50,000 பார்வையாளர்களை கொண்டிருக்கும். இதனால், டிக்கெட் விற்பனையால் உருவாகும் வருவாய் கோடிக்கணக்கில் இருக்கும். ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டால் ரூ. 100 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சைஸ் வருவாய் 20% முடக்கம்
பிரான்சைஸ் வருவாய், பிசிசிஐயின் மொத்த வருவாயை பெரிதும் சார்ந்துள்ளது. உதாரணமாக, ராஜஸ்தான் ராயல்ஸ், 2024ஆம் ஆண்டில் மொத்த ஐபிஎல் உரிமைகளிலிருந்து ரூ. 553.6 கோடி வருவாயை ஈட்டியது, இது அந்த அணியின் மொத்த வருவாயில் 84% ஆகும். இந்த சீசனில் 20% போட்டிகள் நடக்கவில்லை என்றால், அணிகள் எதிர்பார்க்கும் ஆண்டு வருமானத்தில் அதே அளவு இழப்பு ஏற்படும் — ஒரு உரிமையாளருக்கு ரூ. 80 கோடி அல்லது அதற்கு மேல் இழக்க நேரிடும். அதுமட்டுமின்றி, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தால், அந்த பிரான்சைஸின் ஸ்பான்சர்ஷிப் வருவாயும் மேலும் அதிகரித்திருக்கும். தற்போது அந்த வாய்ப்பும் நிறுத்தப்படும்.
இவை அனைத்தையும் வைத்து பார்த்தல் ஊடக உரிமைகள் (BCCI) (ரூ. 2,000 கோடி), விளம்பர வருவாய் (ஒளிபரப்பாளர்கள்) (ரூ. 2,000 கோடி), போட்டி நாள் & டிக்கெட் வருவாய் (ரூ. 1,000+ கோடி) உரிமையாளர்-குறிப்பிட்ட வருமான இழப்பு (ரூ. 80+ கோடி) என கிட்டத்தட்ட இந்த 16 போட்டிகள் நிறுத்தப்பட்டால் 5000 கோடிகளுக்கு மேல் வருவாய் இழப்பை சந்திக்க உள்ளது கிரிக்கெட் வட்டாரம். ”நிதி இழப்புகள் மிகப்பெரியதாக இருந்தாலும், தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது” என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். போர்ச் சூழல் அமைதியடைந்த பிறகு, ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுக்கும் வாய்ப்பு உள்ளது என வர்ணனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.








