இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் ட்ரோன்களின் பயன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. பல ஏக்கர் பரப்பளவுள்ள பெரும் பண்ணைகள் துவங்கி சிறிய பண்ணைகள் வரை இப்போது டிரோன்களை பயன்படுத்த துவங்கியுள்ளன. உணவு பயிர் உற்பத்தியில் மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பிலும் கூட இந்த ட்ரோன் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.
ட்ரோன் தொழில்நுட்பம் என்றால் என்ன?
ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) என்ற பிரிவின் கீழ் வரும் ட்ரோன்கள் ஆரம்ப காலகட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காலப்போக்கில் அவை பல தொழில் துறைகளில் பயன்பாட்டிற்கு வந்தன. உருவத்தில் சிறிய ரக ஹெலிகாப்டர் போல இருக்கும் இவை, ஒற்றை அச்சு ஹொப்டர் (single copter), பல அச்சு ஹொப்டர் (multi copter) உட்பட பல ரகங்களில் சந்தையில் விற்பனையாகின்றன. பாதுகாப்பு துறை, சினிமா துறை, விவசாயம் என பல துறைகளில் பயன்பாட்டில் இருக்கின்றன.
விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு…

தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் துல்லியமான விவசாய முறையில் (precision agriculture) ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. சிலவகை ட்ரோன்கள் மூலம் ஒரு விவசாய நிலத்தில் இருக்கும் மண்வளம், நீர்வளம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம். சிலவைகை ட்ரோன்களில் உயர்ரக கமெராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம், பயிர்களில் ஏற்பட்டிருக்கும் பூச்சித் தாக்குதல், பூஞ்சை தாக்குதல் ஆகியவற்றைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். ஒரு சில ட்ரோன்கள் உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகள் தெளிக்கப் பயன்படுகின்றன. இவை அனைத்தும் தொழில்நுட்பத்தின் உதவியால், துல்லியமான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதால், மகசூல் அதிகரித்திருப்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் ஆரம்ப நிலையில் இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாய உற்பத்தியின் செயல்திறனை அதிகரிக்க யமஹா, கோத்தாரி உட்பட பல தொழில்துறை நிறுவனங்கள் முயற்சிசெய்து வருகின்றன.










