மலிவு விலையில் மொபைல் டேட்டாவை வழங்குவதில் தொடங்கிய ஜியோவின் 10 ஆண்டு பயணம், தற்போது 5G, பிராட்பேண்ட், டிஜிட்டல் சேவைகள், கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு என விரிவடைந்துள்ளது. ஜியோவின் முக்கிய நோக்கம், மொபைல் சேவையை மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவதாக இருந்தது. 2016ஆம் ஆண்டு ஜியோ இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்தபோது, மொபைல் டேட்டா மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. அப்போது ஒரு GB டேட்டாவின் விலை சுமார் ரூ.228 ஆக இருந்தது. இன்று அதே ஒரு GB டேட்டாவின் விலை சுமார் ரூ.7.9 ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் மாதத்திற்கு சராசரியாக 42.3 GB டேட்டாவைப் பயன்படுத்துகிறார். ஜியோ டேட்டாவின் விலையை மட்டும் குறைக்கவில்லை. மக்கள் மொபைல் போனை பயன்படுத்தும் முறையையும் மாற்றி அமைத்துள்ளது.
டிஜிட்டல் வளர்ச்சி
ஜியோவின் வளர்ச்சியுடன் டிஜிட்டல் சேவைகளும் வேகமாக வளர்ந்தன. டிஜிட்டல் வாலட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. அதேபோல், OTT மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
மலிவான டேட்டா கிடைத்ததால், மக்கள் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதன் மூலம் டிஜிட்டல் சேவைகளுக்கு மிகப்பெரிய சந்தை உருவானது. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரமும் இதன் மூலம் வேகமாக வளரத் தொடங்கியது.
மேலும் படிக்க: https://industrialeconomist.com/jio-platforms-to-file-for-ipo/
ஜியோவின் சொந்த தொழில்நுட்பம்
இதுவரை இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அதிகமாக நம்பியிருந்தன.
ஆனால், ஜியோ தனது சொந்த 5G தொழில்நுட்பத்தை உருவாக்கத் தொடங்கியது. Core Network முதல் Radio Technology வரை பல்வேறு தொழில்நுட்பப் பகுதிகளை ஜியோ உருவாக்கியுள்ளது. ஜியோவில் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் 11,303 பேர் பணியாற்றுகின்றனர். மேலும், 6,817 காப்புரிமைகளும் உள்ளன. நாடு முழுவதும் 5G சேவையை சுமார் 15 மாதங்களில் ஜியோ கொண்டு சென்றது. இதன் மூலம், இந்தியாவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே உருவாக்கும் மாற்றத்தையும் ஜியோ கொண்டு வந்துள்ளது.
இன்னும் 2G பயன்படுத்துபவர்கள்
இந்தியாவில் இன்னும் சுமார் 25 கோடி பேர் பழைய 2G போன்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. இதற்காக ஜியோபாரத் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண feature phone போல இருக்கும். ஆனால் இதில் UPI பணப்பரிவர்த்தனை, HD Voice, கேமரா மற்றும் streaming போன்ற வசதிகள் உள்ளன.
இதன் மூலம், ஸ்மார்ட்போன் வாங்க முடியாதவர்களுக்கும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு செல்ல ஜியோ முயற்சி செய்கிறது.
வீட்டிற்குள் ஜியோ
ஜியோவின் வளர்ச்சி மொபைல் சேவையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பிராட்பேண்ட் சேவையிலும் ஜியோ வேகமாக வளர்ந்துள்ளது. UBR என்ற தொழில்நுட்பத்தின் மூலம், வழக்கமான fibre cable இல்லாமலேயே வீட்டிற்கு broadband வழங்க முடிகிறது.
2026 மார்ச் மாதத்தில், ஜியோவின் home broadband வாடிக்கையாளர்கள் 2.7 கோடியைத் தாண்டியுள்ளனர். இந்த இணைய இணைப்பின் மூலம் TV, entertainment, cloud storage, gaming மற்றும் smart-home சாதனங்களைப் பயன்படுத்த முடியும். இதனால், இணைய இணைப்பு என்பது வெறும் internet பயன்படுத்துவதற்கான வசதி மட்டும் என்ற நிலை மாறியுள்ளது. வீட்டில் பயன்படுத்தப்படும் பல்வேறு டிஜிட்டல் சேவைகளுக்கும் அது அடிப்படையாக மாறியுள்ளது.
நிறுவனங்களுக்குள் 5G
ஜியோவின் தொழில்நுட்பம் நிறுவனங்களிலும் விரிவடைந்துள்ளது. முன்பு நெட்வொர்க் மனிதர்களை இணைப்பதற்காக இருந்தது. இப்போது இயந்திரங்கள், sensors, robots மற்றும் industrial systems ஆகியவற்றையும் இணைக்க முடிகிறது. Private 5G மூலம் தொழிற்சாலைகளில் இயந்திரங்களையும் ரோபோக்களையும் இணைக்க முடியும். விமான நிலையங்கள், வங்கிகள் மற்றும் மின்சார விநியோகம் போன்ற துறைகளிலும் ஜியோவின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், 5G என்பது மனிதர்களை இணைப்பதற்கான தொழில்நுட்பம் மட்டுமல்ல. தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் இயந்திரங்களுக்கும் இது முக்கியமானதாக மாறியுள்ளது.
AI-க்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்
அடுத்த கட்டமாக செயற்கை நுண்ணறிவு அல்லது AI முக்கியத்துவம் பெறுகிறது. AI மூலம் நெட்வொர்க்கில் ஏற்படும் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். டேட்டா நெரிசலை கணிக்கவும், Maintenance பணிகளை தானியங்கி முறையில் மேற்கொள்ளவும் முடியும். Cloud, IoT மற்றும் 5G ஆகியவை இதற்கான அடிப்படை தொழில்நுட்பங்களாக உள்ளன.
எனவே, ஜியோவின் எதிர்காலத்தில் 5G மற்றும் Cloud மட்டுமல்லாமல், AI-க்கும் முக்கிய பங்கு உள்ளது.
இந்தியாவைத் தாண்டி…
ஜியோ உருவாக்கிய தொழில்நுட்பத்திற்கு இந்தியாவுக்கு வெளியேயும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் குறைந்த செலவில் தொழில்நுட்பத்தை உருவாக்கி செயல்படுத்திய அனுபவத்தை மற்ற நாடுகளிலும் பயன்படுத்த முடியும். இதனால், இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கும் செல்லக்கூடும்.
ஜியோவின் 10 ஆண்டு மதிப்பீடு
ஜியோவிடம் தற்போது 52.4 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். 2026ஆம் நிதியாண்டில் செயல்பாட்டு வருவாய் ரூ.1,46,885 கோடியாக இருந்தது. EBITDA ரூ.76,255 கோடியாக இருந்தது. ஆனால், ஜியோவின் வெற்றியை இந்த எண்ணிக்கைகளால் மட்டும் பார்க்க முடியாது. ஜியோ மட்டும் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை உருவாக்கவில்லை. ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள், அரசு உருவாக்கிய டிஜிட்டல் கட்டமைப்புகள், போட்டி நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் என பலரும் இதில் பங்களித்துள்ளனர். ஆனால், டேட்டாவின் விலையையும் அதன் பயன்பாட்டின் அளவையும் மாற்றியதில் ஜியோ முக்கிய பங்கு வகித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகள்
ஜியோ IPO-வை நோக்கி நகரும் நிலையில், அடுத்த கேள்வி மிகவும் முக்கியமானதாகிறது. இந்தியா எவ்வளவு டேட்டாவைப் பயன்படுத்தும் என்பது மட்டும் கேள்வி அல்ல. இந்த டிஜிட்டல் கட்டமைப்பைப் பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள், வீடுகள் மற்றும் மக்கள் எவ்வளவு பொருளாதார மதிப்பை உருவாக்கப் போகிறார்கள்? என்பதுதான் அடுத்த கேள்வி.
முதல் 10 ஆண்டுகள் – இணைப்பை அனைவருக்கும் கொண்டு வந்தது.
அடுத்த 10 ஆண்டுகள் – அந்த இணைப்பின் மூலம் இந்தியா எவ்வளவு பொருளாதார மதிப்பை உருவாக்குகிறது என்பதை தீர்மானிக்கும்.









