அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் (Fed), தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் வரை தொடரும் என அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தி 2 சதவீதத்திற்குக் குறைவாக வைத்திருக்க அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அறிவிப்புதான். இதையடுத்து, நேற்று ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறித்து அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் கெவின் வார்ஷ் அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், “வட்டி விகிதத்தை உயர்த்தவோ, குறைக்கவோ இல்லை. தற்போதைய வட்டி விகிதமே தொடரும். நாட்டின் பொருளாதாரத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். பணவீக்கத்தை 2 சதவீதத்திற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று கூறினார்.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் அமெரிக்க பங்குச் சந்தை சரியத் தொடங்கியது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் சிறிய மாற்றம்கூட இந்தியாவை நேரடியாகப் பாதிக்கும்.
அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவில் இருந்து திரும்பப் பெற்று அமெரிக்காவில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும்; இந்திய ரூபாயின் மதிப்பு குறையும். ரூபாயின் மதிப்பு குறைந்தால், இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை அதிகரிக்கும்.
அமெரிக்க வட்டி விகிதத்திற்கும் தங்கத்தின் விலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பொதுவாக, போர் பதற்றம் காரணமாக பங்குச் சந்தையில் நிலையற்ற சூழல் வரும் போதும் அல்லது அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் போதும், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் உலகச் சந்தையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து, அதன் விலை உயரும். இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும். ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் நாணயக் கொள்கைக் குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறவுள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம், இந்தியாவில் அதிகரிக்கும் பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கான அபாயம், பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.









