வணிகம்

அமெரிக்கவின் எரிசக்தி உறவுகள்: இந்தியாவிற்கு ‘வியூக சிந்தனை’ தேவை

முக்கிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு உறவுகளை விரைவுபடுத்தும் நோக்கத்தில், கடந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி, ஒரு விரிவான வியூகக் கட்டமைப்பில் கையெழுத்திட்டனர். அது COMPACT என அழைக்கப்படுகிறது, ‘இராணுவக் கூட்டாண்மை, விரைவுபடுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வாய்ப்புகளை ஊக்குவித்தல்’ (Catalyzing Opportunities for Military Partnership, Accelerated Commerce & Technology) என்பது இதன் விரிவாக்கம்.

இந்த COMPACT ஒப்பந்தத்தின் மூலம், 2025-ல் 150 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகமானது, 2030-க்குள் 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லட்சிய இலக்கை அடைவதில் எரிசக்தித் துறை முக்கிய உந்து சக்தியாக அமைகிறது.

இந்தியா-அமெரிக்கா இடையிலான எரிசக்தி உறவு என்பது வெறும் வாங்குபவர்-விற்பவர் என்ற பாரம்பரிய நிலையிலிருந்து ஒரு ‘மூலோபாயக் கூட்டாண்மை’யாக (strategic partnership), தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பரிணமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான இலக்கு இருப்பது இரண்டு நாடுகளுக்கும் நல்லதே என்றாலும், LNG, LPG மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றை வாங்குவதற்கான நீண்டகால இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது இந்தியா வழக்கத்தை விட அதிக கவனமாக இருக்கவேண்டும். இன்று லாபகரமாகத் தோன்றும் ஒரு விஷயம், சூழ்நிலைகள் மாறும்போது பிற்காலத்தில் அதிக செலவை ஏற்படுத்தும் ஒன்றாக மாற வாய்ப்புள்ளது.

வரலாறு காணாத அளவில், மிகப்பெரிய அளவில் எண்ணெய் விநியோகம் குறைந்ததால் இந்தியா மூன்றாவது முறையாக ‘எண்ணெய் அதிர்ச்சியை’ (oil shock) எதிர்கொண்டு வருகிறது. எனவே, இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு தொடர்பான முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் தற்போதைய நெருக்கடியின் அடிப்படையில் அமையக்கூடும். இதுவரை இந்தியா கண்ட மூன்று முக்கிய எண்ணெய் அதிர்ச்சிகளுமே ‘பிளாக் ஸ்வான்’ (black swan) எனப்படும் எதிர்பாராத மற்றும் அரிதான நிகழ்வுகள்.

ஒவ்வொரு முறையும் இந்த எண்ணெய் அதிர்ச்சிகளுக்கான காரணங்களும் தன்மைகளும் வெவ்வேறாக இருந்தன. ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தாலும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால நெருக்கடிகளுக்கான கொள்கையை வகுப்பது, அவசியமோ அல்லது அறிவுப்பூர்வமானதோ அல்ல.

அமெரிக்கா-இந்தியா எரிசக்திப் பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலான எரிசக்திப் பாதுகாப்பு ஒத்துழைப்பு அம்சங்களும் COMPACT-இன் ஒரு பகுதியாக இடம்பெற்றிருந்தன.

அமெரிக்காவில் எண்ணெய்க்கான தேவை குறையக்கூடும் என்பதாலும், அதனால் ‘மூலோபாய பெட்ரோலிய இருப்பு’களை (SPR) சேமித்து வைப்பதற்கான தேவை குறையக்கூடும் என்பதாலும், இந்தியா இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தியா தனது மூலோபாய இருப்பு எண்ணெயை அமெரிக்காவிலேயே குறைந்த செலவில் சேமித்து வைக்கலாம் அல்லது அவசர காலங்களில் எண்ணெய்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான உத்தரவாதத்தை அமெரிக்காவிடமிருந்து பெறலாம்.

இதுபோன்ற யுக்தி இந்தியாவுக்குப் பெருமளவிலான முதலீட்டுச் செலவை மிச்சப்படுத்தும். சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக டிரம்ப் நிர்வாகத்தின் போது நடந்தது போல, அமெரிக்கா தனது உத்தரவாதத்தை மாற்றிக்கொண்டால், அதில் சில அபாயங்கள் நிச்சயமாக இருக்கவே செய்யும். சிறந்த சட்ட ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், ஒப்பந்தங்களை போதுமான நெகிழ்வுத்தன்மையுடனும், அபாயங்களை குறைக்கும் வகையிலும் உருவாக்க முடியும்.

SPR விவகாரத்தில், 90 நாட்களுக்கான இறக்குமதித் தேவையை ஈடுசெய்ய IEA (சர்வதேச எரிசக்தி முகமை) சில அளவுகளை பரிந்துரைத்துள்ளது. அந்த அளவை எட்டுவதற்கான பெருமளவு பணத்தை முதலீடு செய்வதின் தேவை குறித்து இந்தியா தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். உலக அளவில், நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 12 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் விநியோகம் குறைந்திருந்த மிகப்பெரிய நெருக்கடிச் சூழலிலும், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ளவில்லை.
இந்தியா தனது எண்ணெய் இறக்குமதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தியதன் மூலம், இறக்குமதிப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது; எனவே, 90 நாட்களுக்கான இறக்குமதி இருப்பை வைத்திருக்க வேண்டியதன் அவசியமா என்பது குறித்த கேள்வி எழுகிறது.

இந்தியாவின் ஹைட்ரோகார்பன் துறையில் அமெரிக்க முதலீட்டிற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவின் தொழில்நுட்ப நிபுணத்துவம், அதிக மதிப்பைச் சேர்க்கக்கூடிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு–உற்பத்தித் துறை (Upstream Exploration & Production) மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) உள்கட்டமைப்புத் துறைகளில் அந்நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய இந்தியா ஊக்கமளிக்க வேண்டும்.

கயானாவின் அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்; அங்கு 2015-ல் அமெரிக்க நிறுவனமான எக்ஸான்மொபில் (ExxonMobil) மிகப்பெரிய அளவிலான எண்ணெய் இருப்பைக் கண்டறிந்தது. (11 பில்லியன் பீப்பாய்களுக்கும் மேல் – ஒப்பிடுகையில் இந்தியாவின் வணிக ரீதியாக எடுக்கக்கூடிய கச்சா எண்ணெய் இருப்புகள் வெறும் 5 பில்லியன் பீப்பாய்கள் மட்டுமே, இது சுமார் 2.5 ஆண்டுகாலத் தேவைக்குச் சமம்)

உலகம் ‘எண்ணெய் தேவை உச்சத்தை எட்டுவது’ (Peak Demand) குறித்த திட்டமிடலைத் தொடங்கியிருந்த நேரம் அது. எண்ணெய் இருப்பை கண்டுபிடிக்கத் தவறியதால் ‘ஷெல்’ (Shell) நிறுவனம் அங்கிருந்து வெளியேறியிருந்தது.

பெரிய அளவிலான சவால்களையும் எதிர்கொள்ள நிறுவனங்கள் விரும்பும் அளவில் கயானாவின் விதிமுறைகள் இருந்தன. எண்ணெய் நிறுவனங்கள் ஆய்விலிருந்து கிடைக்கும் வருவாயில் 75 சதவீதத்தைப் பயன்படுத்தி தங்கள் செலவுகளை முழுமையாக ஈடுகட்டும் வகையில் உற்பத்தி மற்றும் வருவாய் பகிர்வு ஒப்பந்தங்கள் இருந்தன. மீதமுள்ள 25 சதவீதம் சமமாகப் பகிரப்பட்டது.

அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்க இந்தியா பல ஆண்டுகளாக முயற்சித்துத் தோல்வியடைந்துள்ளது. ஒருவேளை, ‘கம்பாக்ட்’ (COMPACT) ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அதிக ஊக்கத்தைப் பெறலாம்; அதே சமயம், அவற்றை ஈர்க்கும் வகையில் ஆய்வு ஒப்பந்தங்களை வழங்கும்போது இந்தியா இன்னும் சிறந்த விதிமுறைகளை பரிசீலிக்கலாம். இது இரு தரப்புக்கும் பயனளிக்கும் ஒரு சூழலாக அமைய வேண்டும்.
இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் எண்ணெய் கண்டுபிடிப்பதற்கான வெற்றி விகிதம் மிக அதிகமாக இல்லாத சூழலிலும், எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ளும் பெரும் அபாயத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.

சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) கூற்றுப்படி, அடுத்த 10 ஆண்டுகளில் உலகளாவிய எண்ணெய் தேவை வளர்ச்சியில் இந்தியா சுமார் பாதியை வகிக்கும். இதனால்தான், இந்தியாவில் தனது எண்ணெய் வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்த அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

இருப்பினும், தற்போதைய நெருக்கடி போன்ற சூழல்கள் இல்லாத பட்சத்தில், இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கொள்முதல் பெரும்பாலும் சந்தை நிலவரங்களையே சார்ந்திருக்குமே தவிர, வர்த்தக ஒப்பந்தங்களைச் சார்ந்திருக்காது. எனினும், எல்.என்.ஜி (LNG) மற்றும் எல்.பி.ஜி (LPG) போன்ற பொருட்களுக்கான நீண்ட கால வர்த்தகத்தை ஊக்குவிக்கலாம். மாறிவரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் வகையிலான, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக ஒப்பந்தங்கள் இருக்க வேண்டும்.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள நீண்ட தூரம் மற்றும் போக்குவரத்து நேரம் ஆகியவை கச்சா எண்ணெய் வர்த்தகத்தை ஊக்குவிக்காததற்கான காரணமாக அடிக்கடி கூறப்படுகின்றன.

இது உண்மையான காரணம் அல்ல. வெகு தொலைவில் உள்ள வெனிசுலாவிலிருந்தும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியா ஆர்வமாக உள்ளது. வெனிசுலா எண்ணெய் மிகவும் அடர்த்தியானதாகவும் (extra heavy) அதிக சல்பர் கொண்டதாகவும் (sour) இருந்தபோதிலும் இந்த ஆர்வம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெனிசுலா கச்சா எண்ணெய், அதன் கவர்ச்சிகரமான விலையின் காரணமாக விரும்பப்படுகிறது; இந்த விலை, WTI அல்லது ப்ரெண்ட் போன்ற ஒப்பீட்டு விலைகளிலிருந்து பெருமளவில் தள்ளுபடி செய்யப்படுகிறது. ரிலையன்ஸ் போன்ற சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இது நல்ல லாபத்தைத் தருகிறது, ஏனெனில் இத்தகைய கனமான மற்றும் கந்தகத்தன்மை கொண்ட கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கத் தேவையான சரியான சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு அவர்களிடம் உள்ளது.

மேலும், சரியான சந்தை நிலவரங்களின் கீழ் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது, பல்வகைப்படுத்தலை அளிக்கிறது. இது தனக்கே உரிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் அதிகபட்சப் பலன்களைப் பெறுவதற்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறைக்கென ஒரு தனிப் பணிக்குழுவை இந்தியா அமைக்க வேண்டும். பெட்ரோலியத் துறை அமைச்சரின் தலைமையில், ஆய்வு, உற்பத்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைப்படுத்தல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த ஆலோசகர்களைக் கொண்டு ஒரு வலுவான மூலோபாயத் திட்டத்தை உருவாக்க வேண்டும். இல்லையெனில், 500 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கு வெறும் கனவாகவே இருக்கும்.

(ஆசிரியர் சர்வதேச எண்ணெய் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் மற்றும் ONGC-யின் ஆய்வு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியவர்).

(This article is a translated version of the original article published in Industrial Economist. Translated by Veeraselvi Mathiazhagan.)

Click here for Original

Related Posts