தொழில்நுட்பம்

“நிலவில் நகரம் அமைக்கப் போகிறேன்..” எலான் மஸ்க்கின் புதிய திட்டம்!

பூமியை தவிர வேறு எந்தெந்த கோள்களில் மனிதர்கள் வாழமுடியும் என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. அப்படி நடந்த ஆராய்ச்சிகளில்,செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ வாய்ப்பிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் திட்டமிட்டுவருகின்றன. இந்நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் ஒரு நகரத்தை உருவாக்க திட்டமிட்டுருப்பதாக தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்,”நிலவில் ஒரு நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரை உருவாக்க 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால், 10 ஆண்டுக்குள் நிலவில் ஒரு நகரத்தை உருவாக்க நம்மால் முடியும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நோக்கம் எப்போதும் மாறாதது.

கோள்கள் ஒவ்வொன்றும் 26 மாதங்களுக்கு ஒருமுறை நேர்கோட்டில் வரும்போது மட்டுமே செவ்வாய் கிரகத்திற்குப் பயணம் செய்ய முடியும். அதுவும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல 6 மாத காலமாகும். ஆனால் நிலவுக்கு நாம் ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை விண்கலத்தை ஏவ முடியும். 2 நாளில் சென்று விட முடியும்.

இதன்மூலம், செவ்வாய் கிரகத்தை விட நிலவில் ஒரு நகரத்தை மிக வேகமாக உருவாக்க முடியும். அதே சமயம், 5 முதல் 7 ஆண்டுகளில் ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய் கிரகத்திலும் ஒரு நகரத்தை உருவாக்குவதற்கான பணிகளும் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வரும் 2027-ல் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் பணியில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. ‘நாசா’-வுடன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், இணைந்து பணியாற்றி வரும் நிலையில் மஸ்க்கின் இந்த திட்டம் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Posts