பணப் பற்றாக்குறை (Cash Crunch) வராமல் இருக்க, அடிப்படையிலிருந்து சில விஷயங்களைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். சுருக்கமாக, ஆனால் பயனுள்ளதாக உங்களுக்குச் சொல்கிறேன்
1.செலவைக் கட்டுப்படுத்தும் பழக்கம்
வருமானம் வந்தவுடன் அதை முழுவதும் செலவு செய்து விடாதீர்கள். எதிர்காலத் தேவைக்கு என 10%-30% தொகையைத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
செலவை தேவையா? ஆசையா? என்று தெளிவாகத் தனியே பிரிக்க வேண்டும். ஆசைக்கு அளவாகச் செலவிட வேண்டும்.
2.மாத குடும்ப பட்ஜெட் அவசியம்
வருமானம் – செலவு = மிச்சம் என்பது போல் குடும்பச் செலவுகள் இருக்க வேண்டும்.
அதற்கு பட்ஜெட் போட்டுச் செலவு செய்ய வேண்டும். சம்பளத்தில் 50% அவசிய தேவைகளுக்கு 20% ஆசைப்படுவதற்கு மீதி 30% எதிர்காலத் தேவைகளுக்கு என ஒதுக்க வேண்டும்.
3.அவசர கால நிதி (Emergency Fund)
குடும்ப மாத செலவுகளைப் போல் 3–6 மாத தொகையை வங்கி சேமிப்பு கணக்கு, ரிஸ்க் இல்லாத லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் போட்டு வைக்க வேண்டும்.
இந்தத் தொகை இருக்கும்பட்சத்தில் திடீர் வேலை இழப்பு, மருத்துவச் செலவு ஆகியவற்றின் போது கவலைப்படத் தேவையில்லை. மேலும், கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
4.அதிகக் கடன் தவிர்க்க வேண்டும்
அதிக வட்டி வசூலிக்கும் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு செலவை தவிர்க்க வேண்டும். இந்தக் கடன்கள் பண அழுத்தத்தை ஏற்படுத்தி வேலை, தொழிலில் சரியாகச் செயல்பட விடாமல் தடுத்துவிடும்.
வாங்கும் கடன் மூலம் வருமானம் வர வேண்டும். அல்லது வாங்கும் பொருளின் மதிப்பு கூட வேண்டும்.
5.ஒரே வருமானத்தை நம்பி இருக்கக் கூடாது
சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. வேலை பாதிக்காமல், பகுதி நேரம் (Part Time Side Income), ஃப்ரீலான்சிங் (Freelancing) வருமானத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் (பங்குச் சந்தை சார்ந்தது) திட்டங்களில் முதலீடு செய்து முதலீட்டு வருமானம் (Investment income) வர வேண்டும்.
பல்வேறு வருமானங்கள் வரும் போது பணப்பற்றாக்குறை வர வாய்ப்பில்லை.
6.காப்பீடுகள் கட்டாயம். !
மருத்துவக் காப்பீடு (Health Insurance) இல்லையென்றால் ஒரு பெரிய மருத்துவமனை செலவு, வாழ்நாள் சேமிப்பை காலி செய்துவிடும். குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நோய் பாதிப்பு, விபத்தில் சிக்கும் சூழல் வரலாம். அந்த வகையில் ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு கட்டாயம் ஆகும்.
குடும்பப் பாதுகாப்புக்கு, டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை (Term Life Insurance Policy) குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் எடுப்பது அவசியமாகும்.
ஒரே வரியில் சொன்னால், பணப் பற்றாக்குறை வர காரணங்கள் – தவறான செலவுகள் + திட்டமில்லாத வாழ்க்கை ஆகும்.
அதைத் தவிர்க்கும் வழி – குடும்ப பட்ஜெட் + செலவு மற்றும் முதலீடு ஒழுங்கு ஆகும்.
-Written by

சு.ஶ்ரீதரன்,
நிறுவனர் – walletwealth









