தங்கம் என்பது நம் ஊரில் ஒரு பொருள் மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. பெரியவர்கள் சொல்வார்கள் – “தங்கம் வாங்கி வைத்தால், ஒரு நாள் பயன் இருக்கும்” என்று. அதனால்தான் நம்மில் பலர் நகையாகவோ, நாணயமாகவோ தங்கம் வாங்கி வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 2024 செப்டம்பர் 11 அன்று, 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.73,200 ஆக இருந்தது. 2025 செப்டம்பர் 11 அன்று, அதன் விலை ரூ.1,12,500 ஆக உயர்ந்துவிட்டது. அதாவது, சுமார் 54% லாபம்.
Gold ETF என்றால், நாம் தங்கத்தை நேரடியாக வாங்குவதில்லை. ஆனால், அதே தங்க விலையை அடிப்படையாகக் கொண்டு, பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் ஒரு முதலீட்டு முறை. ஒரு டிமேட் (Demat) கணக்கு இருந்தால் போதும், பங்குகளை வாங்குவது போல நாம் ETF-ஐ வாங்கலாம். இதிலும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இது சுமார் 50% வரை லாபம் தந்துள்ளது.
எது சிறந்தது? நேரடி தங்கமா, ETF-ஆ? ஒவ்வொன்றுக்கும் நன்மைகளும், குறைபாடுகளும் உள்ளன.
நேரடி தங்கம் – நகை, நாணயம் நன்மைகள்: நகையாக அணியலாம், விழாக்காலங்கள் மற்றும் திருமணங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் வைத்திருக்கலாம் – கண்களுக்குத் திருப்தி தரும். குறைபாடுகள்: செய்கூலி கட்டணம் இருக்கும். பாதுகாப்புச் செலவுகளும் வரும் (லாக்கர் வைக்க வேண்டும்). தூய்மை சரியாக இருக்கிறதா என்ற கவலை இருக்கும்.
Gold ETF – ஆன்லைனில் வாங்கும் தங்கம்: நன்மைகள்: நேரடியாகத் தங்கம் வைத்திருக்க வேண்டியதில்லை. திருட்டு பற்றிய கவலை இல்லை. சந்தை விலையை எளிதாகக் கண்காணிக்கலாம். தேவைப்படும்போது வாங்கலாம், விற்கலாம். குறைந்த தொகையில் முதலீடு செய்யலாம். குறைபாடுகள்: இது பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், சந்தை வீழ்ச்சியால் பாதிக்கப்படும். நிர்வகிப்பு கட்டணம் செலவாகும்.
அப்போ எது நல்லது? நீங்கள் திருமணத்துக்கோ, நகையாக அணியவோ தங்கம் தேவைப்பட்டால், நேரடி தங்கம் வாங்குவதுதான் சிறந்தது. ஆனால், நீங்கள் பயப்படாமல் ஒரு நல்ல முதலீடு செய்ய வேண்டும், சேமிக்க வேண்டும் என்றால், Gold ETF ஒரு அருமையான வழி. ETF-ல், செய்கூலி இல்லை, லாக்கர் கட்டணம் இல்லை, பாதுகாப்பானது, எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும், தங்கம் பற்றிய எந்தக் கவலையும் இல்லை.
தங்கம் விலை எப்போதும் மேலேதான் போகும் என்று யாரும் உறுதி அளிக்க முடியாது. சர்வதேச சந்தை, டாலர்-ரூபாய் மதிப்பு, உலக அரசியல் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலையைப் பாதிக்கின்றன. எனவே, “நேற்று 54% லாபம் வந்தது, அப்போ நாளைக்கும் வரும் என்று முடிவெடுக்கக் கூடாது. நகை வேண்டுமா? நேரடி தங்கம் வாங்குங்கள். முதலீடு வேண்டுமா? Gold ETF-ல் போடுங்கள்.








