தொழில்நுட்பம்

இது இருந்த போதும்! Gold loan வாங்க அலைய வேண்டியதே இல்லை

மாத கடைசி… கையில் பணமில்ல… இந்த சமயத்தில் தான் திடீரென வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்…… அல்லது
மகனோ, மகளோ – “கல்வி கட்டணம் செலுத்த இன்னைக்கு தான் கடைசி தேதி…” என வருத்தத்தோடு பார்ப்பார்கள். இதில் சூழலை நம்மில் பலர் சந்தித்து இருப்பர். இதுபோன்ற சமயத்தில் நமக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியாத போழுது நமக்கு கைகொடுப்பது தங்க நகை தான்.

குருவி சேர்ப்பது போல் சிறுசிறு தொகையாக சேர்த்து அந்த பணத்திற்கு நகை அல்லது தங்கக் காசு வாங்குவது நமது தாத்தா காலத்தில் இருந்து வந்த பழக்கம். இதுபோன்ற அவசர காலத்தில் கையில் இருக்கும் நகையை வங்கியிலோ அல்லது வட்டிக்கடையிலோ வைத்து பணம் பெற்று பயன் படுத்துவோம். ஆனால் வங்கிக்கு போனால் ஒரு நாள் இரண்டுநாள் அலைய வைப்பார்கள். இதற்கு பயந்தே பலர் வட்டிக்கடைகளை நோக்கி செல்கின்றனர்.

gold loan atm paramakudi

இந்த பிரச்சனையை சரிசெய்யவே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி புதிய முயற்சி எடுத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செயல்பட்டு வரக்கூடிய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் புதிய தங்க கடன் ஏ.டி.எம்-ஐ அறிமுகம் செய்துள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள கோதவாடாவில் இந்த வங்கி சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக தங்க நகை கடன் வழங்கும் ஏ.டி.எம். எந்திரத்தை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது.

இந்த ஏ.டி.எமுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்தியாவின் முக்கிய பகுதிகளிலும் இதனை கொண்டு வர அந்த வங்கி முடிவு செய்தது. அந்த வகையில் இரண்டாவது ஏ.டி.எம் பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது.

எப்படி வேலை செய்கிறது:

gold loan atm paramakudi

இதுவும் மற்ற ஏ.டி.எம்களைப் போலவே தான் இருக்கும், ஆனால் இதில் தனியாக ஒரு நகை அளக்கும் பெட்டி இருக்கும். அந்த பெட்டியில் நகைகளை வைத்தால் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் தங்கத்தின் தரம் மற்றும் எடை அளவுகளை வைத்து அன்றைய சந்தை விலைக்கு ஏற்ப 10 முதல் 12 நிமிடங்களில் கடன் வழங்கிவிடும். ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. உங்களால் 10% பணத்தை மட்டுமே ஏ.டி.எம் எந்திரம் மூலம் எடுக்க முடியும். மீதி பணத்தை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து விடும், அதனை பின்னர் நீங்கள் எடுத்து கொள்ளலாம்.

தற்போது இது தொடக்க நிலையிலுள்ளதால், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த சேவையை பெற முடியும். மற்ற வங்கிகளும் இதனை நடைமுறைப்படுத்த முயற்சி செய்து வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய முயற்சி மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், அதிக வட்டி வசூலிக்கும் வட்டிக்கடைகளுக்குச் செல்லவும் தேவையில்லை.

Related Posts