வணிகம்

இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங்க்: ஒரு மாதம் Free!

உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்கை இந்தியாவில் விரைவில் தொடங்க உள்ளது. இந்தியா முழுவதும் செயற்கைக்கோள் இணைய சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்டார்லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா போன்ற மாபெரும் சந்தையில் ஸ்டார்லிங்கின் வருகை, ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உணர்ந்த ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஸ்பேஸ் எக்ஸுடன் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. 
உலகில் இரண்டாவது பெரிய இணைய சந்தையாக இந்தியா இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் 140 கோடி மக்களில் 67 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இன்னும் இணைய வசதி இல்லை என GSMA வெளியிட்ட 2024 ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகின் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கி வரும் ஸ்டார்லிங்கிற்கு, 2024 நிலவரப்படி 4.6 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
இதன் அடுத்த கட்டமாக, இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவில் தனது சேவையை தொடங்கவுள்ளதாக ஸ்டார்லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்ல, இந்தியாவில் அறிமுகமாகவுள்ள சந்தா விவரங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் அதே சந்தா இங்கும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஸ்டார்லிங்க் டிவைஸை செட் அப் செய்வதற்கான கட்டணம் ரூ.33,000 என்றும், மாதாந்திர சந்தா ரூ.3,000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரூ.3,000-க்கு ஒரு மாதத்திற்கு உங்களுக்கு அன்லிமிடெட் இணைய சேவை வழங்கப்படும். இதற்குப் பிறகு, முதல் ஒரு மாதத்திற்கு நீங்கள் இலவச டிரையல் (free trial) பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் இணைய சேவையின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தடையின்றி இணையத்தை அணுக முடியும். இது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதோடு இந்தியாவின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Posts