மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, Gratuity பெறுவதற்கான குறைந்தபட்ச காலம் 5 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
நம்ம மொத்த சம்பளத்தில் PF, ESI போல சில தொகைகள் பிடிக்கப்படும். அதேபோல், எல்லோரின் ஆஃபர் லெட்டரிலும் CTC-யில் “Gratuity” என ஒரு குறிப்பிட்ட தொகை சேர்த்து பிடிப்பாங்க. கிராஜுவிட்டி தொகையில், ஊழியரின் சம்பளத்திலிருந்து மிகக் குறைவான தொகை மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்; பெரும்பகுதி தொகை நிறுவனம் சார்பில் செலுத்தப்படும். ஆனால் இந்த தொகையை PF, ESI போல நாம் வேண்டுமென்றால் உடனே எடுத்து கொள்ள முடியாது.
கிராஜுவிட்டி என்றால் என்ன?
ஒரு ஊழியர் குறைந்தது 5 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்திருந்தால், அவருக்கு பணிக்கொடை எனப்படும் கிராஜுவிட்டி வழங்கப்படும். இன்றைய சூழலில் ஒரே நிறுவனத்தில் 5 ஆண்டுகள் வேலை செய்வது பலருக்கும் சவாலாக மாறியுள்ளது. கிராஜுவிட்டி பெறுவதற்கு சில விதிமுறைகளும், கணக்கிடுவதற்கு தனி Formula உள்ளது.
ஒரு ஊழியர் 6 மாதத்திற்கும் மேல் வேலை செய்திருந்தால், அது ஒரு ஆண்டாக கருதப்படும்.
உதாரணமாக 6 ஆண்டுகள் 7 மாதம் → 7 ஆண்டுகள். அதுவே 6 ஆண்டுகள் 4 மாதம் → 6 ஆண்டுகள்.
கிராஜுவிட்டி கணக்கிடும் Formula: Gratuity = (கடைசி சம்பளம்) × (15/26) × (ஆண்டுகள்)
உதாரணமாக, 5 வருடங்கள் வேலை செய்து கடைசியாக பெற்ற சம்பளம் ரூ.30,000 என வைத்தால் 30000 × 15/26 × 5 = ரூ.86,538
இந்த திட்டத்தில்தான் இப்போது அரசு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதுவரை ஒரு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் வேலை செய்தால் மட்டுமே கிராஜுவிட்டி பெற முடிந்தது. ஆனால் இப்போது அரசு அதை 1 ஆண்டாக குறைத்துள்ளது.
இதனால், இனி 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று இருக்கும் ஜென் z மனநிலைக்கு ஏற்ற வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
அத்துடன், புதிய சட்டத்தில் Fixed-term ஊழியர்களும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக கருதப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம், விடுப்பு சலுகைகள், காப்பீடு போன்ற நலன்கள், நிலையான கால ஊழியர்களுக்கும் கிடைக்கும்.








