பூமியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் ஒன்றுதான் இட்ரியம் (Yttrium). இந்த தனிமத்திற்கான தேவை தற்பொழுது உலகளவில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா–சீனா, அமெரிக்கா–ரஷ்யா, அமெரிக்கா–இந்தியா போன்ற நாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றங்கள் மற்றும் குறிப்பாக சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளே இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் இட்ரியத்தின் பற்றாக்குறை உருவாகும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இட்ரியத்தின் முக்கிய உற்பத்தியாளராக உள்ள சீனா, அமெரிக்க வரிகளுக்குப் பதிலடியாக கடந்த ஏப்ரல் மாதம் இட்ரியம் உட்பட 6 அரிதான தனிமங்களின் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதன்படி ஏற்றுமதியாளர்கள் பெய்ஜிங்கில் இருந்து சிறப்பு ஏற்றுமதி உரிமம் பெற வேண்டியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இட்ரியம் பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது.
இட்ரியம் பற்றாக்குறையால் அதன் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அதிக வெப்பத்தைத் தாங்க பயன்படும் இட்ரியம் ஆக்சைடு (Yttrium oxide) ஐரோப்பிய நாடுகளில் ஜனவரி மாதத்திலிருந்து 4,400% வரை உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் இட்ரியத்தின் 93% நேரடியாக சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இட்ரியம் தனிமத்திற்கான தேவை திடீரென உயர்வதற்கான காரணம், இது அதிக வெப்பநிலையையும் அழுத்தத்தையும் தாங்கக்கூடியது மற்றும் தொழில்துறையில் பயன்படுத்தக்கூடிய முக்கிய உலோகமாகும். இந்த அரிதான தனிமம் பற்றாக்குறைக்கு ஏற்பட்டால் பல துறைகளிலும் பெரிய தாக்கம் ஏற்படும்.
குறிப்பாக விண்வெளி மற்றும் ஏரோஸ்பேஸ் துறைகளில் பயன்படுத்தப்படும் ஜெட் என்ஜின்களில் இட்ரியம் முக்கிய மெட்டலாக பயன்படுகிறது. இதுமட்டுமல்லாது, செமிகண்டக்டர் துறையிலும் சிப்கள் தயாரிக்க இட்ரியம் பயன்படுத்தப்படுகிறது. வேகமாக வளர்ந்து வரும் இந்த துறையில் இட்ரியம் பற்றாக்குறை, உற்பத்தி நேரத்தையும் செலவையும் பெரிதும் அதிகரிக்கக்கூடும். இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் தயாரிக்கப்படும் டர்பைன் பிளேடுகளை அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்க இட்ரியம் பூசப்படுகிறது.









