தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள செல்வபெருந்தகை மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு புதிய தலைவரை நியமிக்க அகில இந்திய தலைமை முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து செல்வபெருந்தகை மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வபெருந்தையும் இதனை உறுதிபடுத்தும் விதமாக தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து விலகி தொகுதி பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக முன்னரே செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரச் கட்சிக்கு புதிய மாநில தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எஸ்.அழகிரிக்கு பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 2024 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவருக்கு மாநில தலைவராக பொறுப்பு அளிக்கப்பட அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே விசிக உள்ளிட்ட கட்சிகளில் பங்காற்றி அரசியல் அனுபவம் பெற்றிருந்தவர் என்பதும், பட்டியலினத்தை சேர்ந்த அரசியல் தலைவர் என்பதும் இவரது பலமாக இருந்தது. ஆனால் அதேநேரம் இவருக்கு எதிரான புகார்களும் டெல்லியில் குவிந்த வண்ணம்தான் இருந்தன.
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளிலும் வென்றது இவர் மீதான மதிப்பை அதிகப்படுத்தி இருந்தாலும். 2026 சட்ட மன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் இவரது நடவடிக்கைகள் கட்சியினர் சிலரிடம் இருந்து எதிர்ப்பை சம்பாதிக்க வைத்தது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பிய கோஷத்தை எல்லாம் அமைதிபடுத்த செல்வ பெருந்தகை மிகவும் சிரமப்பட்டார்.
ஒரு கட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்றதைவிட கூடுதலாக 3 சட்டமன்ற சீட்டுகளும் ஒரு மாநிலங்களவை சீட்டையும் பெற்று திமுகவுடனான கூட்டணி ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டது. கூட்டணி தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுகவிற்கு ஆதரவாக செல்வபெருந்தகை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வேட்பாளர் தேர்விலும் தனக்கு ஆதரவானவர்களுக்கு சீட்டுகளை ஒதுக்கியதாகவும் அதில் பணம் விளையாடியதாகவும் செல்வ பெருந்தகை மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

எல்லாவற்றையும் விட ராகுல் காந்தியின் பிரச்சார உரையை மிகவும் மோசமாக மொழிபெயர்த்தது இணையத்தில் வைரலாகி கேளிக்குள்ளானது. மறுநாள் கன்னியாகுமரியில் நடக்க இருந்த பிரச்சார பொதுகூட்டத்திற்கு இவரை செல்லவிடாமல் வருமான வரித்துறை முடக்கி வைத்திருப்பதாக கூறியதும், நாங்கள் எந்த சோதனையும் நடத்தவில்லை என வருமானவரித்துறை மறுத்ததும் செல்வபெருந்தகைக்கு எதிராகவே போய் முடிந்தது.
இந்நிலையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து செல்வபெருந்தகையை மாற்றிவிட்டு அந்த இடத்திற்கு வேறொரு தலைவரை நியமிக்க டெல்லி தலைமையிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.எஸ்.அழகிரி, திருநாவுகரசர், தங்கபாலு உள்ளிட்டோர் மாநிலத் தலைவர் பதவியை பிடிக்க போராடி வருகின்றனர். மேலும் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், செல்லகுமார், கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் ஆகியோரும் தலைவர் பதவிக்கு காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைமைக்கு பழைய தலைவர்களை தேர்வு செய்வதில் விருப்பமில்லை எனவும் இதுவரை பதவியில் இல்லாத புதிய நபர் ஒருவருக்கே வாய்ப்பு அளிக்க இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.









