அமரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத்துறை (Department of Government Efficiency) தலைவர் பொறுப்பில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக் டொனால்ட் டிரம்ப் நிறுத்தப்பட்டார். அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டிரம்பை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். மேலும் அவரது தேர்தல் செலவுகளுக்காக பெருமளவு நிதியையும் நன்கொடையாக அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும், செயல் மேம்பாட்டுத்துறை என்ற புதிய துறையை உருவாக்கி அதன் தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார்.
அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் இந்த துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் பரிந்துரையின் வழியாக வெளிநாடுகளுக்கான நிதியுதவிகள் நிறுத்தப்பட்டன. அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இவற்றின் மூலம் கடந்த 5 மாதங்களில் ரூ.10 லடசம் கோடி செலவு குறைந்ததாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க எலான் மஸ்கிற்கு எதிராக கண்டன குரல்கள் அமெரிக்காவில் எழுந்தன. எங்களால் தேர்வு செய்யப்படாத ஒரு நபர் எங்களை எப்படி ஆளலாம் என கேள்விகள் எழத் தொடங்கின.
இந்த நிலையில்தான் DOGE துறையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
DOGE துறை ஒரு ஆண்டுக்கு 130 நாட்களுக்கு மட்டுமே வேலை செய்யும் அதன்படி பார்க்கையில் மே 30ஆம் தேதிவரை எலான் மஸ்க் பதவியில் இருக்க எந்த தடையும் இல்லை. ஆனாலும் முன்னதாகவே DOGE துறையை விட்டு விலகுவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.
https://x.com/elonmusk/status/1927877957852266518
இதற்கிடையே அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள “Big Beautyful Bill” சட்ட மசோதாவிற்கும் எலான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் பல்வேறு பொருளாதார செலவுகளை மாற்றியமைக்கும் இந்த சட்ட மசோதா அதிக வரிச்சலுகைகளை வழங்குவதனால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது DOGE துறை வழங்கிய பரிந்துரைகளை குறைத்து மதிப்பிடுவதாகும் எனவும் கூறியுள்ளார். எனினும், இந்த சட்டம் கடந்த வாரம் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்டது.
எனினும் எலான் மஸ்க் DOGE-ஐ விட்டு வெளியேறியதற்கு இந்த சட்ட மசோதாதான் காரணமா என அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கவில்லை









