பொது

ICC மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி: தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்யுமா இந்தியா?

வரும் ஞாயிற்றுக் கிழமை, நவம்பர் 2ஆம் தேதி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கப்போகும் ஒரு மாபெரும் போட்டி நடைபெற உள்ளது. ஆம்! இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத இரண்டு பலம் வாய்ந்த அணிகளான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதவுள்ளன.

இந்த ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது அவ்வளவு எளிதான காரியமல்ல. உலகச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த மெகா இலக்கான 339 ரன்களை, இந்திய அணி வெறும் 48.3 ஓவர்களிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே, இதுதான் அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங் என்ற மகத்தான சாதனை. இந்த வரலாற்று வெற்றியில் நாயகியாக ஜொலித்தவர், வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ். அவர் ஆட்டமிழக்காமல் எடுத்த 127 ரன்கள், இந்திய கிரிக்கெட்டில் ஒரு நாக்-அவுட் சேஸிங்கில் பதிவான மிகப்பெரிய தனிநபர் ஸ்கோர்களில் ஒன்றாகும்.

கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அதிரடியாக 89 ரன்கள் அடித்து ஜெமிமாவுடன் கைகோர்க்க, இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இதன்மூலம், இந்திய மகளிர் அணி 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

2017லும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தித்தான் இந்தியா இறுதிக்கு முன்னேறியது. ஆனால், அந்தப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது. இம்முறை, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதவுள்ளதால், கிரிக்கெட் உலகிற்கு புதிய சாம்பியன் அணி கிடைப்பது உறுதி.

கோப்பையை முதல்முறையாக வெல்லப்போகும் அந்த அணி, இந்தியாவா அல்லது தென்னாப்பிரிக்காவா?

கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவை நனவாக்க, இந்திய மகளிர் அணி களமிறங்குகிறது. இந்த பரபரப்பான ஃபைனலை வரும் ஞாயிறு அன்று காணத் தவறாதீர்கள்.

Related Posts