திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், ரூ.15,037 கோடி முதலீட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems – BESS) அமைக்க விக்ரம் சோலார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
முதல்வர் விஜய், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய இரண்டு இடங்களில் சூரியஒளி மின்னழுத்த (Solar PV) தொகுதி உற்பத்தி ஆலைகளை விக்ரம் சோலார் குழுமம் ஏற்கனவே நிறுவியுள்ளது. இந்நிலையில், கங்கைகொண்டானில் புதிதாக மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் அமைக்க தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) என்பது சூரியன், காற்று அல்லது மின் கட்டமைப்பிலிருந்து ஆற்றலைப் பெற்று, பிற்காலப் பயன்பாட்டிற்காக மின்கலன்களில் சேமிக்கும் ஒரு மீள் மின்னேற்றத் (rechargable) தீர்வாகும். இது ஆற்றல் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையில், ஒரு இடைத்தாங்கு பொருளாக (buffer) செயல்பட்டு, மின்சாரத்தை விநியோகிக்க உதவுகிறது. மேலும் இது செலவுகளை குறைத்து மின் கட்டமைப்புகளை நிலைப்படுத்துகிறது.









