வணிகம்

TVS Credit தனி நிறுவனமாக மாற வாய்ப்பு – சுதர்ஷன் வேணு

சென்னை: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது நிதிச் சேவைப் பிரிவான TVS Credit-ஐ எதிர்காலத்தில் தனி நிறுவனமாகப் பிரிப்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை பரிசீலிக்க உள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுதர்ஷன் வேணு தெரிவித்தார். இதன் மூலம் பங்குதாரர்களுக்கு அதிக மதிப்பு உருவாகும், என நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுதர்ஷன் வேணு தெரிவித்தார்.

நிறுவனத்தின் 34-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் (AGM) காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், “நீண்டகால நலனை கருத்தில் கொண்டு, சரியான நேரத்தில், ஒவ்வொரு கட்டமாக நிறுவனம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

டிவிஎஸ் கிரெடிட் நிதி நிறுவனம் 2026 ஆம் ஆண்டு தனது வலிமையை அதிகரித்துள்ளது. நிதியாண்டின் இறுதியில் கடன் வழங்கல் 26 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.30,000 கோடியைத் தாண்டியுள்ளதுடன், இருசக்கர வாகனங்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 2.4 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

“வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தில், அதிகரித்து வரும் நடுத்தர வர்க்க மக்களின் நிதித் தேவைகளையும், அவர்களின் நிதி இலக்குகளையும் நிறைவேற்ற டிவிஎஸ் கிரெடிட் முக்கிய பங்காற்றி வருகிறது,” என்று சுதர்ஷன் வேணு தெரிவித்தார்.

“கடந்த பல ஆண்டுகளாக, நிதிச் சேவை வணிகத்தை உருவாக்கவும், வளர்க்கவும் குழுமம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இதன் விளைவாக, டிவிஎஸ் வேணு குழுமத்தின் ஒட்டுமொத்த வணிகச் சூழலில், முக்கிய அங்கமாக இந்த நிதிச் சேவைப் பிரிவு வளர்ந்துள்ளது,” என்று சுதர்ஷன் வேணு குறிப்பிட்டார்.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் முதலீடு செய்யும் திட்டம் குறித்த பங்குதாரரின் கேள்விக்கு பதிலளித்த சுதர்ஷன் வேணு, அந்த முதலீட்டின் மூலம் பல்வேறு வணிக வாய்ப்புகள் உருவாகும் என்றும், அந்த வங்கி சிறப்பாக வளர்ச்சி அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

“இது பெரிய முதலீடு அல்ல; எங்கள் நிதி சேவை முதலீட்டில் ஒரு பகுதியாகும்; இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் தரத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றும் தெரிவித்தார்.

எதிர் கால வளர்ச்சி குறித்து பேசிய அவர், “இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகும். 2026-27ஆம் ஆண்டுகளில் 6.4 to 6.5 சதவீதம் வரை வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

“இந்த ஆண்டின் முதல் காலாண்டு, இந்தியாவின் வளர்ச்சி இலக்குகளையும், இருசக்கர வாகன வணிகத்தின் வலுவான வளர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது,” என்று சுதர்ஷன் வேணு தெரிவித்தார்

Related Posts