தமிழகத்தில் CISF எழுத்துத் தேர்வும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ பரிசோதனையின் போது 6 விரல்கள் இருப்பதைக் காரணமாகக் கூறி நிராகரிக்கப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்றவர், கடந்த ஆண்டு நடைபெற்ற CISF தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, உடல்தகுதி தேர்விலும் சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சி பெற்றார். மருத்துவ பரிசோதனைக்காக சென்ற அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.. அவரை பரிசோதனை செய்த அதிகாரிகள், அவரது கையில் 6 விரல்கள் இருப்பதைக் கூறி அவரை நிராகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “மாற்றுத் திறனாளிகளின் உடல் குறைபாடு அந்த பணிக்கேற்ப திறனை பாதிக்காத பட்சத்தில், அவர்களை நிராகரிப்பது நியாயமற்றது” எனக் கூறியுள்ளது. மேலும் மனுதாரரை மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய காவல் படைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி இட ஒதுக்கீடு கிடையாது. மருத்துவ பரிசோதனையின் போது கைகளிலும் கால்களிலும் 6 விரல்கள் இருந்தால், அவர்கள் மாற்றுத் திறனாளிகளாக கருதப்பட்டு நிராகரிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணமாக அதிகாரிகள் கூறுவது, ராணுவ உடைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்படுகின்றன. எனவே, கை உறை அல்லது காலணியை அணிவதில் சிரமம் ஏற்படக்கூடும்.
தினசரி பணிகளில் இது இடையூறாக இல்லாவிட்டாலும், சில ஆயுதங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தும் போது, கை அமைப்பும் விரல்களின் கட்டுப்பாடும் முக்கியம் என தெரிவித்துள்ளன. அந்த வகையில் இந்த வழக்கு தற்பொழுது பேசும் பொருளாகி வருகிறது.









