சிறப்பு கட்டுரைகள்

நல்லியும் நானும்… குப்புசாமி செட்டியின் பயணம்!

ஆறு வயதில் தன் தொழில் மீது ஏற்பட்ட காதல், இப்போது 86 வயதாகியும் தீராக்காதலாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்கிறார் நல்லி குழுமத்தின் தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார். ஜவுளி தொழிலில் பல நிறுவனங்களுக்கு முன்னோடியாக, 1928 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நல்லி சில்க்ஸ் இன்று 98 ஆண்டுகள் கடந்து, தனது 100-வது ஆண்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி அந்த நிறுவனத்தின் அடையாளமாகவே நல்லி குப்புசாமி செட்டியார் இருக்கிறார்.

ஐஸ்கிரீமில் தொடங்கிய சகாப்தம்

கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் என பல உயரிய விருதுகள் வாங்கியிருக்கும் நல்லி குப்புசாமிக்கு, 1940-களில் தனது ஆறாம் வயதில் கிடைத்த ஐஸ்கிரீம்தான் முதல் விருதாக இருந்திருக்கிறது. “நூறு ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கும் நாளில் என் அப்பா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவார். அதுக்காக தினமும் கடைக்கு போவேன்” என்று தனது 6 வயது நினைவை பகிர்ந்துகொள்கிறார் நல்லி குப்புசாமி செட்டியார். நாட்கள் நகர நகர, ஐஸ்கிரீம் கிடைக்கவில்லை; ஆனால், நல்லி குப்புசாமி கடைக்கு செல்லும் பழக்கம் தொடர்கிறது. தனது 13-வது வயதில் தந்தை நல்லி நாராயணசாமி செட்டியார் இறந்த பின்னர், கடையின் பொறுப்பு இவருக்கு வருகிறது. கடையை சுத்தம் செய்வது, துணிகள் நறுக்குவது, வாடிக்கையாளரை கவனிப்பது என அடிப்படை வேலைகள் தெரிந்தால் மட்டுமே நிர்வகிக்க முடியுமென, இதுபோன்ற வேலைகள் அவருக்கு ஆரம்பத்தில் வழங்கப்பட்டன. சிறுவன் என்பதால் சில நிதி நிர்வாக பொறுப்புகள் இவருடைய 20-வது வயது வரை இவருக்கு வழங்கப்படவில்லை.

Nalli Kuppusamy Chetti at his young age

ஒரே தாரக மந்திரம்

13 வயதில் திசையறியாது நின்ற நல்லி குப்பசாமி கற்றுக்கொண்டிருந்தது தன் அப்பாவின் தொழில் திறமையை மட்டும்தான். “என் அப்பா வடிக்கையாளர் கூடவே நின்று, ஒவொன்றையும் பார்த்து பார்த்து செய்வார். வடிக்கையாளர்களும் அவர் மேல் அதீத மரியாதை வைத்திருந்தார்கள்” என்கிறார் நல்லி. இன்று பல நாடுகளில், பல கிளைகள் இருந்தாலும், தன் அப்பா கொடுத்த வாடிக்கையாளர் சேவைபோல தன்னால் கொடுக்க முடியவில்லை என்ற எண்ணமும் அவரிடம் இருக்கிறது. “கடை சாவியுடன் சென்று கடை சாவியுடன் வீடு திரும்ப வேண்டும்” என தன் அப்பாவின் நண்பர் கூறிய அறிவுரையே இன்றளவும் தனது தாரக மந்திரமாக இருப்பதாக நல்லி குப்புசாமி கூறுகிறார்.

கர்நாடக இசை ஆர்வம்

வீடு, கடை என்று ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் நல்லி குப்புசாமிக்கு, கர்நாடக சங்கீதம் மீது அதீத ஆர்வம் இருக்கிறது. சிறுவயதில், ஆள் அரவமற்ற தி.நகர் சாலைகளில் கர்நாடக சங்கீதம் இரவில் ஒலித்துக்கொண்டு இருக்குமாம். அதை தன் வீட்டு வாசலில் நின்றபடியே மெய்மறந்து பலமுறை கேட்டிருப்பதாக நல்லி சொல்கிறார். இப்போதும் பல சபாக்களுக்கு நிதி உதவி வழங்குவது, அவற்றை நிர்வகிப்பது, கர்நாடக இசை கலைஞர்களை ஊக்குவிப்பது என ஆர்வமாக இருக்கிறார்.

Legendary Carnatic singer M. S. Subbulakshmi

இவருடைய தந்தைக்கு கர்நாடக சங்கீதம் மீது இருந்த ஆர்வம்தான், “MS Blue” என்ற தனித்துவமான நிறம் உருவாக காரணமாக இருந்திருக்கிறது. 1950-களில், மறைந்த கர்நாடக பாடகி MS சுப்புலக்ஷ்மிக்காக, சபாவினர் வேண்டுகோளுக்கு இணங்க நல்லி குப்புசாமியின் தந்தை ஒரு நீல நிற புடவையை வடிவமைத்திருக்கிறார். பிற்காலத்தில் அந்த நிறம் “MS Blue” என்ற அடையாளமாகவே மாறியது. சுவிற்சர்லாந்து நாட்டின் ஒரு Dye (நிறமூட்டி) வியாபாரி கொடுத்த சூத்திரத்தில் (chemical formula) MS Blue உருவானது. 2016-ல் அதே MS Blue நிறத்தில், வாடிக்கையாளர்கள் சிலர் புடவைகள் கேட்கவே, நல்லி குப்புசாமி அந்த நிறத்தை மீண்டும் உருவாக்கம் செய்திருக்கிறார். “மறுபடி போட்டாலும், அது அசல் ‘MS Blue’ போல இல்லை; அதே மாதிரி அசலா மீள் உருவாக்கம் செய்ய முயற்சி எடுக்கிறோம்” என தனது 86 வயதிலும் தொழிலில் முழு நிறைவை தேடுகிறார் நல்லி குப்புசாமி.

கடமையை செய் பலன் தானாக வரும்

தனது 80 ஆண்டு கால அனுபவத்தில், நல்லி நிறுவனத்திற்கு ஏற்பட்ட பல சவால்களை கலங்காமல் கடந்திருக்கிறார் நல்லி குப்புசாமி. லாபம் வந்தால் தலைக்கு ஏற்றிக்கொள்வதில்லை; நஷ்டம் வந்தால் மனதிற்கு எடுத்துக்கொள்வதில்லை என சிலர் இருப்பார்கள். அதேபோல நல்லியும், “லாபமோ நஷ்டமோ, என் வேலையை எப்படி சரியா செய்ய முடியுமென்று மட்டும்தான் யோசிப்பேன். நஷ்டம் ஏற்படும்போதும் கலங்காமல், நான் என்ன தப்பு செய்தேன்? வாடிக்கையாளருக்கு என்ன குறை வைத்தேன்? என பார்த்து அதை சரி செய்வேன்” என்கிறார்.

கடமையை செய்தால் பலன் தானாக வரும் என்ற நம்பிக்கை கொண்ட நல்லி, பிறர்க்கு உதவுவதிலும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறார். சிறுவயதில் தன் நண்பனின் பள்ளி படிப்பிற்கு உதவிய அந்த மனது, இப்போது வரை தொடர்ந்து பல உதவிகளை எதிர்பார்ப்பில்லாமல் செய்துவருவதாக அவர் சொல்கிறார். இந்த குணங்கள் அவரது இயல்பாகவே இருந்தாலும், பெரும் தலைவர்கள், தொழிலதிபர்களின் சுய சரிதைகள், வாழ்க்கை வரலாறுகள் இவருக்கு பிடித்தவையாக இருக்கின்றன. குறிப்பாக, காந்தியின் சத்திய சோதனை நூலால் ஈர்க்கப்பட்ட இவர், தானும் “சத்தியம், நேர்மை” என்ற இரு கொள்கைகளை கடைபிடித்து வருவதாக கூறுகிறார்.

இளைய தலைமுறையிடம் பாடம்

தனக்கென ஒரு கொள்கையுடன் இத்தனை தசாப்தங்களாக தொழில் நடத்தி வந்தாலும், இளைய தலைமுறையின் அறிவுரைகளை கேட்க நல்லி குப்புசாமி தயங்குவதில்லை. அவர்களின் புதிய முயற்சிகளுக்கு கைகொடுக்கும் நபராகவே இருக்கிறார்.“இப்போதைய தலைமுறைக்கு துணிச்சல் இருக்கிறது. நான் அவர்கள் சொல்வதை ஏற்கிறேன்; அவர்களும் வெற்றிகரமாக சொல்வதை செய்கிறார்கள். அவர்களிடம் நான் கற்றுக்கொள்கிறேன்” என எவ்வித கர்வமும் இல்லாமல் தனக்கே உரிய தன்னடக்கத்துடன் நல்லி குப்புசாமி சொல்கிறார். ஆறு வயதில் ஐஸ்கிரீமுக்காக கற்றுக்கொள்ள ஆரம்பித்த ஒரு சிறுவன், இன்று 86 வயதிலும் அதே முனைப்போடு கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

 

Click here to see the podcast with Nalli Kuppusamy Chettiyar

Related Posts