நிதி

ரூ.350 கோடிக்கு வெளிநாட்டு பயணம்.. வெளியானது பிரதமர் மோடியின் பயண செலவு!

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக 2021 ஆம் ஆண்டிலிருந்து ரூ.350 கோடி செலவாகியிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக செய்யப்பட்ட செலவு குறித்து மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளது.

அதன்படி 2025 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்பட 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணங்களுக்கு ரூ.67 கோடி செலவாகியுள்ளது. மேலும், மொரீஷியஸ், சைப்ரஸ், கனடா, குரேஷியா, கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜெண்டினா, பிரேசில், நமீபியா போன்ற நாடுகளுக்கு இந்த ஆண்டு அவர் மேற்கொண்ட பயணங்களின் செலவு குறித்த விவரங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்த 2025 ஆண்டை பொறுத்தவரை, பிரான்ஸ்க்கு ரூ.25.5 கோடி, அமெரிக்காவிற்கு ரூ.16.5 கோடி, தாய்லாந்துக்கு ரூ.4.9 கோடி, இலங்கைக்கு ரூ. 4.4 கோடி, சவுதி அரேபியாவுக்கு ரூ.15.5 கோடி பயண செலவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டு ரூ.100 கோடி, 2023ல் ரூ.93 கோடி, 2022ல் ரூ.55 கோடி, 2021ல் ரூ.36 கோடி செலவாகியுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள், உச்சி மாநாடுகள், வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் சந்திப்பு, அரசு விருந்துகள் போன்ற காரணங்களுக்காக இந்தப் பயணங்களை பிரதமர் மோடி மேற்கொண்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts