பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த லக்கி பிஷ்ட் (Lucky Bisht) இப்போது நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.
நடிகர் லக்கி பிஷ்ட் என்று அழைக்கப்படும் லக்ஷ்மண் சிங் பிஷ்ட், உத்தரகாண்டை சேர்ந்தவர். இவர், தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) கமாண்டோவாக இருந்தவர். 1988 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 16 வயதிலேயே சிறப்பு காவல் படையில் சேர்ந்திருக்கிறார். மிக இளம் வயதிலேயே இஸ்ரேலுக்கு சென்று பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இவர் NSGல் சிறந்த கமாண்டோவாக 2009 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது அவருடைய சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக இருந்திருக்கிறார்.
தற்போது MX பிளேயரில் ஒளிபரப்பாகும் “சேனா – கார்டியன்ஸ் ஆஃப் தி நேஷன் (Sena Guardians Of The Nation)” என்ற வெப் சீரிஸில் அவர் நடித்துள்ளார். இந்த வலைத் தொடரை அபினவ் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் முன்னனி கதாபாத்திரமாக விக்ரம் சிங் சவுஹான் நடித்திருக்கிறார்.
இந்திய ராணுவத்தில் சேர அமெரிக்காவில் தனது வேலையை விட்டுவிட்டு வரும் கார்த்திக் ஷர்மா என்ற இளைஞன்; நல்ல வேலையை உதறிவிட்டு ராணுவத்தில் மகன் சேர்ந்ததில் கோபத்தில் இருக்கும் கார்த்திக்கின் அப்பா தீன் தாயால் ஷர்மா; இவர்கள் இருவருக்குமான பாசப்போராட்டம்; தேர்வு எழுதி ராணுவத்தில் சேர்ந்து கஷ்மீரில் கேப்டனாக இருக்கும் கார்த்தி சந்திக்கும் சிக்கல்கள்; இவாறாக கதைக்களம் அமைந்துள்ளது. இந்த படத்தில் ஒரு ராணுவ அதிகாரியாக லக்கி பிஷ்ட் நடித்திருக்கிறார்.

இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமிலும், MX பிளேயரிலும் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸில் நடித்தது குறித்து பேசிய லக்கி பிஷ்ட், “ஒரு உண்மையான வீரரை திரையில் வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த வேடத்தை நான் ஏற்றேன். இராணுவ பின்னணி மற்றும் பயிற்சியில் பெற்ற அனுபவங்கள், என் நடிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. நடிப்பு எனக்கு ஒரு புதிய துறை என்றாலும், ஒரு வீரராக நடிப்பது என்பது எனது நிஜ வாழ்க்கை உணர்ச்சிகளை கேமரா முன் காட்டியது போல இருந்தது” என்றார்.
மோடிக்கு மட்டுமல்லாமல் பல முக்கிய தலைவர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரியாக லக்கி பிஷ்ட் இருந்திருக்கிறார். சந்திரபாபு நாயுடு, LK அத்வானி, ராஜ்நாத் சிங், தருண் கோகோய் ஆகியோருக்கும் பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2010 இல் இந்தியா வந்தபோது, வருக்கு பாதுகாப்பு அளித்த குழுவிலும் லக்கி இருந்திருக்கிறார். ஸ்னிப்பர் (Snipper) துப்பாக்கியை கையாளுவதில் மிக சிறந்த வீரராக அறியப்பட்ட இவர், ‘ரா’, NSG மற்றும் அசாம் ரைபிள்ஸ் போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார்.









