பொது

இந்த யதார்த்தத்திலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது -ஜெய்சங்கர்

இன்றைய மாறிவரும் உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் பல்வேறு நாடுகளில் இருந்து பணியாளர்கள் தேவை. ஒரு நாட்டின் மக்கள்தொகையை காரணமாக காட்டி, உலகளாவிய பணியாளர்கள் தேவை என்ற யதார்த்தத்திலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க்கில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவ்வுரையில், “உலகளாவிய பணியாளர்கள் விவகாரம் இன்று ஒரு அரசியல் விவாதமாக தோன்றலாம். ஆனால் இதில் இருந்து தப்பிக்க வழி இல்லை. ஒரு நாட்டிற்கான தேவையையும் அந்த நாட்டில் உள்ள மக்களையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், பல நாடுகளில் அந்நாட்டில் உள்ள மக்களை மட்டுமே வைத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.

இதுதான் இன்றைய யதார்த்தம். இந்த யதார்த்தத்திலிருந்து நீங்கள் தப்பித்து ஓட முடியாது. அப்படியெனில், சமகாலத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய, திறமையான சர்வதேச பணியாளர்களுக்கான மாதிரியை உருவாக்குவது எப்படி? பல்வேறு நாட்டவர் பணியாற்றும் பணியிடங்களில் இதை பொருத்துவது எப்படி? இதுதான் இன்றைய சர்வதேச பொருளாதாரத்தால் தீர்க்கப்பட வேண்டிய மிகப் பெரிய கேள்வி என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஹெச்1பி விசாவை போலியாக பலர் பயன்படுத்துவதாகவும் எனவே அதனை பெற விரும்பும் வெளிநாட்டவர் ஒரு லட்சம் டாலர் பணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக வெளியுறவுதுறை அமைச்சர் ஜெயசங்கர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா சீனாவுடன் சமீப காலத்தில் இந்தியாவின் உறவு வலுப்பெற்று வருவதை குறிக்கும் விதமாக புதிய கூட்டாளிகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை உணருவதாக பேசியுள்ளார்.

அதாவது, “இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட உலகத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் ஒரு பகுதியாக, நாடுகளுக்கு இடையேயான புதிய, மிகவும் மாறுபட்ட வர்த்தக ஏற்பாடுகள் நடந்தேறியுள்ளன. இந்த நாடுகள் பிற சூழல்களில் எடுக்காத முடிவுகளை கூட இப்போது எடுக்கின்றன. இவை புதிய கூட்டாளிகளையும் புதிய செல்வாக்கு மண்டலங்களையும் உருவாக்க வேண்டும் என்ற ஆசையையும், ஏன் சில நேரங்களில் காட்டாயத்தையும் கூட உணருகின்றன.

எனவே எழவிருக்கும் அனைத்து தடைகளும் சிக்கல்களும், பெரும் பொருளாதார களத்தில் நடப்பதை வைத்து சில வழிகளில் தீர்க்கப்படும் எனவும் சில வழிகளில் குறைக்கப்படும் எனவும் நினைகிறேன்.

தொழில்நுட்ப ரீதியாக, வர்த்தக ரீதியாக, இணைப்பு மற்றும் பணியிடச் சூழல் என அனைத்து வகையிலும், நாம் மிகக் குறுகிய காலத்தில் மிகவும் வித்தியாசமான உலகத்தை அடையப் போகிறோம்

நீங்கள் தேசித்திற்கான திறன்களை உருவாக்கி பயன்படுத்தி வரும் அதே வேளையில், அதில் சிலவற்றை அதற்கு தொடர்புடைய மற்றவர்களுக்கும் கூட வழங்க இயலும்.

டிஜிட்டல் சமூக கட்டமைப்பை எப்படி நடத்துவது என்பதற்கு ஐரோப்பா அல்லது அமெரிக்காவின் மாதிரியை காட்டிலும் இந்தியாவின் மாதிரி மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், பொருத்தமானதாகவும், தங்களுக்கு தகுந்தார் போல மாற்றம் செய்து கொள்ளக்கூடியதாகவும் கருதும் பல சமூகங்கள் உள்ளன” எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts