திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து கடற்படையின் F-35B போர் விமானத்தை கொண்டு செல்ல இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்குள் F-35B போர் விமானத்தை கேலி செய்து நெட்டிசன்ஸ் சேட்டையை ஆரம்பித்துவிட்டார்கள். ஜெட் விமானம் விற்பணைக்கு என்று OLXல் விளம்பரம் செய்தும், போர் விமானம் நேந்திரம் பழ சிப்ஸ் சாப்பிடுவது போன்ற படங்களை பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.

கடந்த ஜூன் 14ஆம் தேதி, இங்கிலாந்து கடற்படையின் F-35B போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாற்றை சரி செய்ய இங்கிலாந்திலிருந்து 40 பொறியாளர்கள் அடங்கிய குழுவை அந்நாடு அனுப்பிவைத்தது. 2 வாரங்களுக்கு மேல் ஆகியும், சிக்கலுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் விமனாத்தை இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக C-17 குளோப்மாஸ்டர் எனப்படும் பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெலிஹாப்ட்டரை எடுத்து செல்லும் அளவு பெரிய விமானம் என்றாலும், F-35B விமானத்தை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
F-35B விமானத்தின் இறக்கைகள் 11 மீட்டர் இருப்பதால், நேரடியாக விமானத்தை C-17க்குள் ஏற்ற முடியவில்லை. அதனால், அதன் இறக்கைகளைப் பிரித்து விமானத்தை பாகங்களாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விமானத்தின் இறக்கைகளைப் பிரிப்பது மிகவும் சிக்கலான செயல்முறை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கடந்த காலங்களில், அமெரிக்காவிலும் தென் கொரியாவிலும் F-35B விமானங்களின் இறக்கைகள் இதேபோன்ற முறையில் அகற்றப்பட்டு வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், இந்த F-35B போர் விமானத்தை பாகம் பாகமாக பிரிக்க 20 நாட்கள் ஆகுமென கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், F-35B போர் விமானத்திற்கு கேரளாவை ரொம்ப பிடித்துவிட்டதுபோல என்று கேரள நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.









