பொது

ஹோர்முஸ் ஜல சந்தியை மூடிய ஈரான்.. மத்திய அரசு சொல்வதென்ன?

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நடக்கும் போரில், மத்தியகிழக்கு நாடுகள் அனைத்தும் போர் பதற்றத்துடன் இருக்கின்றன. வெறும் 33 கிலோமீட்டர் கொண்ட ஒரு ஜலசந்தி உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? அதுதான் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Homruz). இதன் வழியாக எந்த கப்பல் சென்றாலும் அதன் மீது தாக்குதல் நடத்தப்படுமென ஈரான் எச்சரித்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம்

பெர்சிய வளைகுடா (Persian Gulf) மற்றும் ஓமன் வளைகுடா (Gulf of Oman) ஆகியவற்றுக்கு இடையில் இருக்கிறது, இந்த ஹோர்முஸ் ஜலசந்தி. இந்த சந்தியின் வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடந்து வருகிறது. ஒரு நாளில் சராசரியாக 17-20 மில்லியன் பேரல் எண்ணெய் இதன் வழியாக உலக நாடுகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இதன் காரணமாகவே இது உலகத்தின் ஆற்றலை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றது.

சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஈரான் போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் கச்சாஎண்ணெய் இதன் வழியாகத்தான் செல்கின்றன. கச்சா எண்ணெய் மட்டுமல்லாது, உணவு, மருந்து, வாகனங்கள் இதர பல அத்யாவசிய பொருட்கள் என பலவற்றின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இந்த சந்தி பயன்படுத்தப்படுகிறது.

சர்வேதச விதிகளின்படி இந்த சந்தியை ஈரான் மூடுவதற்கு அனுமதி இல்லையென்றாலும், இந்த வழியாக செல்லும் அனைத்து கப்பலையும் தாக்குவோம் என்று ஈரான் பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஓமன் வளைகுடாவில் மார்ஷல் தீவுகளின் டேங்கர் கப்பலை ஈரான் தாக்கியதில், 3 இந்தியர்கள் பலியானார்கள். இந்நிலையில் 500க்கும் அதிகமான டேங்க்கர் கப்பல்கள், ஹோர்முஸ் ஜலசந்தியில் முடங்கி கிடக்கின்றன. இதே நிலை நீடித்தால், தற்போது 75 அமெரிக்க டாலராக இருக்கும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 அமெரிக்க டாலர் வரை உயர வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு என ஆரம்பித்து அனைத்து பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.

அதிக பாதிப்புகளை சந்திக்க போகும் நாடுகள்..

இந்தியா தனது கச்சா எண்ணெயில் சுமார் 85% இறக்குமதி செய்கிறது. அதில், கிட்டத்தட்ட 55%–60% கச்சா எண்ணெய்யானது ஈராக், சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து பெறப்படுகின்றது. இதனால் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு சிக்கலும் இந்தியாவை கடுமையாக பாதிக்கும்.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவும், இதே சிக்கலை சந்திக்க நேரிடலாம். சீனா ஒரு நாளைக்கு 10 மில்லியன் பேரல்களுக்கு மேல் எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதில், சுமார் 40%–45% ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கிறது. இது சீனாவின் தொழில்துறை உற்பத்தியை பாதிக்கும். சீனா உலகளாவிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதால், அதன் விளைவு உலகப் பொருளாதாரத்தில் எதிரொலிக்கும்.

ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் மிக பெரிய சிக்கலை சந்திக்கக்கூடும். ஏனென்றால் இந்த நாடுகள் கிட்டத்தட்ட 90% எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றன. அவற்றில், சுமார் 70-80% மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகிறது. இந்த இரு நாடுகளுக்கும் பெரிய எரிசக்தி பாதுகாப்பு சவால் உருவாகியுள்ளது.

மத்திய அரசு சொல்வதென்ன?

இந்தியாவில் உடனடியாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் இருப்பு உள்ளது. எனவே, உடனடி தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு கிடையாது. நிலைமையைக் கண்காணிக்க அமைச்சகம் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.
இந்தியா தனது எரிபொருள் தேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் மூலம் நிவர்த்தி செய்கிறது. வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து 60 சதவிதம் இறக்குமதி செய்யப்படுவதால், ஹார்முஸ் ஜலசந்தி மீதான சார்பு 40 சதவிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையில் 50 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், அவசர காலத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts