பொது

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பேன்.. டிரம்ப் எச்சரிக்கை!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோல, கனிமங்கள் சார்ந்த ஒப்பந்தம் தொடர்பாக, தன் பேச்சை சீனா கேட்காவிட்டால் அந்நாட்டிற்கு 155 சதவீதம் வரி விதிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா கூடிய விரைவில் படிப்படியாக நிறுத்தப்போவதாக தன்னிடம் பிரதமர் மோடி கூறியதாக டிரம்ப் பேசியிருந்தது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரம்ப்பின் இந்த கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், “இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தமாட்டேன் என கூறினால், அதற்கான பின்விளைவுகளை சந்திக்கும். நான் இந்தியா மீது அதிக வரிகளை விதிப்பேன்” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அதேபோல, சீனாவுக்கும் அமெரிக்காகவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்துவருகிறது. ஏற்கனவே சீன பொருட்கள் மீது 55 சதவீதம் வரி விதித்துள்ளார். இந்நிலையில், அரியவகை கனிமங்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப வர்த்தகத்தில் சீனா முக்கிய கட்டுப்பாடுகளை விதித்ததால் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார்.

சீனா மீது வரிவிதிப்பது தொடர்பாக பேசிய டிரம்ப் , ” நவம்பர் 1ஆம் தேதிக்குள் கனிமங்கள் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்துவேன். வரும் நாட்களில் தென்கொரியா விசிட்டின் சீன அதிபரை சந்திக்க உள்ளேன். அதன் அடுத்தகட்டம் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts