நிதி

பள்ளிக்கரணையில் ரியல் எஸ்டேட் பாதிப்பு

பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை சுற்றி 1 கிலோமீட்டர் பரப்பளவில் கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையால் சுமார் ரூ.51,735 கோடி வணிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக CREDAI தெரிவித்துள்ளது.

பள்ளிக்கரணை ரம்சார் பகுதியில் சதுப்பு நில பாதுகாப்பு, சமூக மேம்பாட்டிற்கு இடையே சமநிலையான கட்டமைப்பு தேவை என்பதை வலியுறுத்தி, சென்னையில் CREDAI அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், CREDAI சென்னையின் தலைவர் மெஹுல் தோஷி, துணை தலைவர்கள் விஸ்வஜித் குமார், TSS கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலப் பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள 1 கி.மீ. ‘பாதிப்பு மண்டலத்தில்’ (Zone of Influence) புதிய கட்டுமானங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கடந்த 2025 செப்டம்பரில், தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) உத்தரவிட்டது. சதுப்புநிலத்தின் உண்மையான பாதிப்பு எல்லையை அறிவியல் ஆய்வின் மூலம் நிர்ணயிக்கும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என தெரிவித்தது.

NGT-ன் உத்தரவைத் தொடர்ந்து, 15 நாட்களில் 2025 அக்டோபரில் CMDA ராம்சார் எல்லை மற்றும் அறிவிக்கப்பட்ட 1 கி.மீ. பாதிப்பு மண்டலத்திற்குள் புதிய திட்ட அனுமதிகள் (Planning Permissions) வழங்கக் கூடாது என்று தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், 9 மாதங்கள் ஆகியும் உண்மையான பாதிப்பு எல்லையை அறிவியல் ஆய்வின் மூலம் அரசு நிர்ணையிக்காமல் கிடப்பில் போட்டுவைத்திருப்பதாக CREDAI அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 8,397 ஏக்கர் பரப்பளவில் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை முடங்கியுள்ளதாக CREDAI-ன் விஸ்வஜித் குமார் கூறினார்.

மேலும், சென்னையின் மிகவும் பரபரப்பான வணிக பகுதியில் இந்த தடை இருப்பதால், சுமார் ரூ.51,735 கோடி மதிப்பிலான வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ரூ.19, 790 கோடி மதிப்பிலான நேரடி மற்றும் மறைமுக வருவாய் உள்ளிட்ட பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சதுப்புநிலங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் CREDAI உறுதியாக இருப்பதாக கூறிய விஸ்வஜித் குமார், பள்ளிக்கரணை ராம்சர் சதுப்புநிலமாக அறிவிக்கப்பட்ட 1248 ஹெக்டேர் நிலத்தில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள 550 ஹெக்டேர் நிலத்தை முறையாக அடையாளப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், 1 கி.மீ. பாதுகாப்பு மண்டலம் அறிவியல் அடிப்படையில் வரையறுக்கப்படவில்லை என்றும், இதனால் குடியிருப்பு, வணிக மற்றும் நிறுவனக் கட்டுமானத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, அரசு இது தொடர்பான வேலைகளை துரிதப்படுத்த வேண்டுமென CREDAIன் விஸ்வஜித் குமார் கோரிக்கை விடுத்தார்.

Related Posts