இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்க எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (Space X) நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஸ்டார்லிங்கில் கிட்டத்தட்ட 6,000 செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. இந்த செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணைய சேவைகளை ஸ்டார்லிங்க் நிறுவனம் வழங்கி வருகிறது. ஏற்கனவே, தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் மாற்றும் ஜியோ தங்களுடைய சேவைகளை மேம்படுத்த ஸ்டார்லிங்குடன் ஒப்பந்தம் செய்திருந்தன. அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் அனைத்தும் தங்களுடைய சில்லறை விற்பனை கடைகளில் விற்பனையை இரு நிறுவனங்களும் திட்டமிட்டிருந்தன.

ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவிற்கு நேரடியாக கொண்டுவர எலான் மஸ்க் முயன்றார். ஆனால், மத்திய அரசு விதித்த தகவல் மற்றும் பாதுகாப்பு விதிகளை அவர் ஏற்க மறுத்ததால், ஸ்டார்லிங்க் சேவைக்கு ஒப்புதல் வழங்காமலிருந்தது. பல மாதங்களுக்குப் பிறகு, அந்த விதிகளை space X ஏற்றுக்கொண்டதால், செயற்கைக்கோள் மூலம் இணையச் சேவைகளை வழங்குவதற்கான விருப்ப கடிதத்தை (Letter of Intent) தொலைத்தொடர்புத் துறை (DoT) ஸ்டார்லிங்கிற்கு வழங்கியுள்ளது.

ஸ்டார்லிங்கிற்கு உலகம் முழுவதும் இப்போது சராசரியாக 50 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். தற்போது இருக்கும் முறையில் இணையச் சேவை வழங்க முடியாத குக்கிராமங்கள், மலை கிராமங்களில் கூட ஸ்டார்லிங்க் மூலமாக இணையச் சேவை வழங்க முடியும். ஆனால், ஸ்டார்லிங்க் சேவைக்கான உபகரணங்களின் விலை அதிகமாக இருக்கிறது என்றும், இணைய சேவையின் வேகமும் குறைவாக இருக்கிறதென்றும் விமர்சனங்கள் இருக்கின்றன. இப்போது 6,000 செயற்கை கோள்கள் ஸ்டார்லிங்க் நிறுவனம் வைத்திருக்கும் நிலையில், அதை வருங்காலத்தில் 40,000 செயற்கைக்கோள்களாக அதிகரிக்க Space X நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்மூலம் ஸ்டார்லிங்க் இணைய சேவையின் வேகம் அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.









