தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் வாடகைத் தாய் (surrogacy) முறையில் பிறந்தவர்கள். ஆனால் இனி வாடகைத் தாய்க்கு பதிலாக வாடகை ரோபோ குழந்தையை சுமந்து பெற்றுக்கொடுக்கும் என்று சொன்னால் நம்ப முடியுமா?
இதுமட்டுமின்றி வாடகைத் தாய் முறையை விரும்பாத சிலர் இன்றும் மருத்துவமனைகளுக்கும் கோவில்களுக்கும் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான தீர்வாக சீனாவில் புதிய ஆராய்ச்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் Kaiwa Technology என்ற நிறுவனம், விஞ்ஞானி டாக்டர் ஜாங் கிஃபெங் தலைமையில், மனித வடிவிலான கர்ப்ப பையுடன் இருக்கும் ரோபோவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த ரோபோ ஒரு பெண் வடிவில் இருக்கும். கருத்தரித்தல் முதல் குழந்தை பிறக்கும் வரை அனைத்தையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் கருப்பையில் இருக்கும் Amniotic திரவத்தால் நிரப்பப்பட்ட செயற்கை கருப்பை, ரோபோவின் வயிற்றில் உருவாக்கப்பட்டு அதில் குழந்தை வளர்க்கப்படும். பிரசவத்தில் தொப்புள் கொடி மிகவும் முக்கியம். அதன் மூலம் குழந்தைக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். இதனை பூர்த்தி செய்யும் வகையில், செயற்கை கருப்பையில் இணைக்கப்பட்ட குழாய் வழியாக ஊட்டச்சத்து குழந்தைக்கு வழங்கப்படும்.
2026-க்குள் இந்த ரோபோவை உருவாக்குவதே இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள். இதனை தயாரிக்க ஆகும் மொத்த செலவு சுமார் ₹12.17 லட்சம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜாங் கிஃபெங் கூறியது:
“செயற்கை கருப்பை தொழில்நுட்பம் ஏற்கனவே முன்னேற்றம் அடைந்துவிட்டது. இப்போது அதை ரோபோவின் உடலில் பொருத்துவது மட்டுமே பாக்கி. இதன் மூலம் ரோபோகள் மனிதர்களை போல் குழந்தையை சுமக்கும் வாய்ப்பு கிடைக்கும்.”
இந்த முயற்சி வெற்றி பெற்றால், குழந்தையின்மை பிரச்சினை கொண்ட தம்பதிகளுக்கு பெரிய உதவியாக இருப்பதோடு, இயற்கை பிரசவத்தைத் தவிர்க்க விரும்பும் பெண்களுக்கும் மாற்று வழியாக இருக்கும்.







