யர்லுங் சாங்போ ஆற்றில் சீனா கட்டவிருக்கும் மெகா நீர்மின் நிலையம் குறித்து, அருணாச்சல முதல்வர் பெமா காண்டுவும், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் கூறியிருக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு திபெத்தின் நியிஞ்சி பகுதியில் உள்ள யர்லுங் சாங்போ ஆற்றில் சீனா மெகா நீர்மின் திட்டத்தை கட்டத் தொடங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்ட இத்திட்டத்திற்கு அந்நாட்டு அரசு 167 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

இது உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நீர்மின் நிலையம் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா நீர்மின் நிலையம் அமையவிருக்கும் பகுதி அருணாச்சல பிரதேசத்திற்கு அருகாமையில் இருக்கிறது. அதனால் இத்திட்டம் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சீனாவின் யார்லுங் சாங்போ ஆறு, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் சியாங் ஆறாக நுழைகிறது. அப்படியே பயணித்து அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்ராவாக மாறுகிறது. மொத்தம் 3,848 கிலோமீட்டர் பயணித்து இறுதியாக வங்கதேச நாட்டில் கடலில் கலக்கிறது. இந்நிலையில் சினா இந்த மெகா நீர்மின் நிலையத்திற்காக கட்டவிருக்கும் அணையால், பிரம்மபுத்ரா வற்றும் அபாயம் இருப்பதாக சில வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அச்சத்தில் அருணாச்சல பிரதேசம்…
நீரை தேக்கி வைத்து, யாரும் எதிர்பாராத நேரத்தில் நதி நீரை சீனா திறந்தால், அது ஒரு ‘தண்ணீர் குண்டு’ (Water Bomb) போல பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார். மேலும், “சீனா என்ன செய்யும் என்று யாருக்கும் தெரியாது. சர்வதேச நீர் ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடவில்லை. அதனால் அந்நாட்டை நம்ப முடியாது. இது எங்கள் மக்களுடைய வாழ்வாதார பிரச்சினை. எங்களுடைய இருத்தலை கேள்விக்குள்ளாகும் அளவிற்கு ஆபத்தானது. இது மிகவும் கவலையளிக்கிறது. இந்த சிக்கல் குறித்து மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்” என்று பெமா காண்டு தெரிவித்துள்ளார்.
அசால்ட்டாக இருக்கும் அஸ்ஸாம்…

சினாவின் மெகா நீர்மின் திட்டம் குறித்து அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு தன் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மாற்றுக் கருத்தை கூறியிருக்கிறார். பிரம்மபுத்திராவின் மொத்த நீரில், 30-35% மட்டுமே சினாவின் பங்கு இருப்பதால் இது அவ்வளவு பெரிய வறட்சியை ஏற்படுத்திவிட முடியாது என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரம்மபுத்திராவின் 65-70% நீரானது அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பெய்யும் பருவமழை காரணமாகவும்; சுபன் சிரி, லோஹித், கமெங், மனாஸ், தன்சிரி, ஜியா-பராலி, கோபிலி போன்ற முக்கிய துணை நதிகள் மூலமாகவும்; காசி, காரோ மற்றும் ஜெயந்தியா மலைகளிலிருந்து வரும் கிருஷ்ணை, திகாரு மற்றும் குல்சி போன்ற ஆறுகள் மூலமாகவும் இந்தியாவிற்குள் உற்பத்தி ஆகிறது. பிரம்மபுத்திரா நதி சீனாவை சார்ந்திருக்கும் நதி அல்ல – இது மழைநீரை அடிப்படையாகக் கொண்ட இந்திய நதி அமைப்பு” என்று கூறியுள்ளார்.
சினாவின் உத்தரவாதம்

சினாவின் மெகா நீர்மின் திட்டம் குறித்து இருமாநில முதல்வர்களும் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மெகா நீர்மின் நிலைய திட்டம் குறித்து சினாவிடம் இந்திய அரசு இந்த ஆண்டு ஜனவரியில் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தது. எல்லையோர மாநிலங்களின் நீர் ஆதாரத்தில் எவ்வித பிரச்சனையும் வராது என்று சினா உத்தரவாதம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.








