காசாவில் இருக்கும் குழந்தைகளில் பலர் பசியால் வாடி, அழுவதற்குக்கூட பலம் இல்லாதவர்களாகி இறந்துவிடுவதாக, ”சேவ் தி சில்ட்ரன்” (Save the Children) என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆஷிங் ஐ.நா.வில் பேசியுள்ளார்.
கடந்த 2023 அக்டோபரிலிருந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்துகொண்டிருக்கிறது.
காசா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் வழங்கிய நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்ததால் அங்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.
இந்த பஞ்சம் இயற்கை பேரிடரால் உருவானதல்ல முழுக்க முழுக்க மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று கூறிய ஐ.நா., காசா ‘பஞ்ச நிலை’யில் இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற சர்வதேச தொண்டு நிறுவன அமைப்பின் தலைவர் ஆஷிங், காசாவில் குழந்தைகளின் நிலை குறித்து ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, “காசா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள், மிகவும் மெலிந்து, பலவீனமாக இருக்கின்றனர். அவர்களுக்கு அழுவதற்குக்கூட வலிமை இல்லை. அவர்கள் பேசுவதும் இல்லை. மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
காசாவில் பஞ்ச நிலை என்று ஐ.நா. அறிவித்திருப்பது வெறும் தொழில்நுட்ப சொல் அல்ல. போதுமான உணவு இல்லாதபோது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக மாறுகிறார்கள். படிப்படியாக அவர்கள் உடல் வலிமை இழந்து வலியுடன் இறக்கிறார்கள். ஆனால் அதனை ‘பஞ்சம்’ என்று சாதாரணமாகச் சொல்கிறோம். இந்த அறையில் உள்ள அனைவருக்கும் இந்தக் கொடுமையைத் தடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது” என்றார்.
சில நாட்களுக்கு, காசாவில் இதுபோல எந்த பஞ்சமும் இல்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியிருந்தார். ஆனால், காசாவில் இருக்கும் மருத்துவர்களும், சேவை செய்பவர்களும் கூறுவது வேறு. மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் குழந்தைகள் எலும்பும் தோலுமாக, பட்டினியுடன் வருவதாகவும், சில சமயங்களில் இறந்தும் வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
காசாவின் மக்கள்தொகையில், 5 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாகவும், இந்த எண்ணிக்கை சில மாதங்களில் 6 லட்சமாக மாறும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த 5 லட்சம் பேரில், 1,32,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாகவும், அவர்களில் 43,000 குழந்தைகள் இறந்து போவதற்கான வாய்ப்புள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் பட்டினியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், காசாவில் பஞ்சம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.









