பொது

டெங்கு காய்ச்சல்: 71 படுக்கைகளுடன் சென்னை அரசு மருத்துவமனைகள்!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோய், பருவமழை காலத்தை ஒட்டி அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது, இந்நிலையில் தமிழக அரசு மருத்துவமனைகள் இதற்குச் சிகிச்சை அளிக்கப் போதிய தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.

சிறப்பு வார்டுகளும் சிகிச்சை விவரங்களும்:

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை அரசு மருத்துவமனைகளில் பிரத்யேகமாக 71 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள் டெங்குவுக்கான தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மற்றும் தீவிர கண்காணிப்பு பிரிவாக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 பேர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 8 பேர் என 18 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாதராண காய்ச்சல் மற்றும் டெங்கு அறிகுறிகளுடன் வருவோர் சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனையை அணுக வேண்டும். இதனை சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் டெங்குவினால் ஏற்படும் உயிரிழப்பை நூறு சதவீதம் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில், 10,000-க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட மற்றும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் மற்றும் தேங்கிய நீரை அகற்றும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுவதாக கூறினார்.

தொற்று நோய் பரவல் தடுப்பு மருத்துவர்கள், “டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் (Aedes) கொசுக்கள் பெரும்பாலும் வீடுகளிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள தேங்கிய நல்ல நீரில் தான் உற்பத்தியாகின்றன. எனவே, அரசு மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தண்ணீர் தேங்கக்கூடிய பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பாத்திரங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், உடனடியாக மருத்துவ ஆலோசனை கட்டாயம் பெறவேண்டும்” என்றனர்.

Related Posts