பொது

வேலையில்லா திண்டட்டத்தை அதிகரிக்குமா Bike Taxi தடை?

பைக் டாக்சி சேவைகளை முழுமையாக தடை செய்ததால், கர்நாடகா முழுவதும் 1,00,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் நிலை எற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட அனைத்து வகையான பைக் டாக்சி சேவைகளும் ஜூன் 16 முதல் செயல்படக்கூடாது என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கர்நாடகா மக்களிடம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

பைக் டாக்சி ஓட்டுநர்கள், மாணவர்கள், தினசரி கூலி தொழிலாளிகள், உதவியாளர்கள் குறிப்பாக கோவிட்-க்குப் பிறகு, வேறு வேலைகள் கிடைக்காத பலர் இந்த பைக் டாக்சி சேவையை தேர்ந்தெடுத்தனர். நடுத்தர மக்களின் வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவுகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பைக் டாக்சிகளிலிருந்து வந்த வருமானத்தை வைத்தே சமாளித்து வந்தனர். தொழில்துறை வளர்ச்சியில் முன்னணி நகரமான பெங்களூருவில், இது இரண்டாவது வருமானமாக மட்டுமல்லாமல், முக்கிய வாழ்வாதாரமாகவும் மாறியுள்ளது.

bike taxi ban karnataka

பைக் டாக்சி மீதுள்ள குற்றச்சாட்டுகள்:

பைக் டாக்சிகள் பாதுகாப்பற்றவை, தனிநபர் வாகனத்தை commercial தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பவை உள்ளிட்ட விமர்சனங்கள் ஏற்கனவே எழுந்துள்ளன. இதனை சரிசெய்ய உரிமம், பயிற்சி, காப்பீடு போன்ற விஷயங்களில் தெளிவான சட்டங்கள் கொண்டு வராமல், நேரடியாக தடை விதிப்பது எந்த வகையில் சரி என Gig பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த தடை ஆயிரக்கணக்கான குடும்பங்களை நிதி நெருக்கடியில் தள்ளும் அபாயம் உள்ளது.

முன்னதாக கர்நாடகா அரசு கொண்டு வந்த மின்சார பைக் டாக்சி சரியாக திட்டமிடாமல் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும், அந்தநேரமும் ஓட்டுநர்களின் கருத்துகள் கவனிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முன்பு Gig பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்டிருந்த நல திட்டங்கள் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், வேலை செய்யவே தடை விதித்துவிட்டு சலுகைகள் எதற்காக என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு இழப்பு:

மேல்தட்டு மக்களுக்கு இந்த தடை பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும், நடுத்தர மக்களுக்கு இது பெரும் நெருக்கடியாக அமையும். குறைந்த செலவில் பயணிக்க விரும்பும் பெருபாலான மக்கள் பைக் டாக்சியையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பேருந்துகள் குறைவாக உள்ள பகுதிகளில், பைக் டாக்சிகளே பயன்படுத்தியாக வேண்டியுள்ளது. ஒரு ஆண்டுக்கு 8 கோடிக்கும் அதிகமானோர் பைக் டாக்சியில் பயணம் செய்கின்றனர். தற்போது அந்த பயணிகள் கடும் அவதி அடைய வேண்டியுள்ளது.

மாணவ, மாணவிகள், குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள், பெண்கள் என பலரும் தினசரி போக்குவரத்துக்கு இந்த சேவையை நம்பியிருந்தனர். மேலும், இதன் விளைவாக ஆட்டோ, டாக்சி கட்டணங்கள் உயரும் அபாயமும் உள்ளது.

உபர் நிறுவனத்தின் பதில்:

பைக் டாக்சி சேவைகள் தடை குறித்து பேசிய உபர் செய்தித் தொடர்பாளர், உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 16) முதல் கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவையை நிறுத்தும் முடிவை உபர் நிறுவனம் எடுத்துள்ளது. இந்த முடிவு ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் ஓட்டுநர்களை நேரடியாக பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.

பைக் டாக்ஸி ஓட்டுநர்களுடன் கலந்தாலோசித்து, பாதுகாப்பும், விதிகளும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதேசமயம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று Gig ஊழியர்கள் கர்நாடகா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Posts