காலமும் அலையும் யாருக்காகவும் காத்திருக்காது. இதை நாம் பலமுறை கவனிப்பதில்லை. நம்மை சுற்றியுள்ள உலகை மாற்றியமைக்கும் அசாதரண திறன் காலத்திற்கு இருக்கிறது. இப்போது வங்கித்துறையில் நடந்து வரும் மாற்றங்களை, இதை தவிர வேறு வார்த்தைகளால் ஒருவர் எப்படி விவரிக்க முடியும்?
கடந்த சில ஆண்டுகளில், இந்திய வங்கி துறை யாரும் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு மாற்றமடைந்துள்ளது. 1964-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சி நிதி நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (Industrial Development Bank of India – IDBI), 2004 அக்டோபரில் IDBI வங்கி லிமிடெட் நிறுவனமாக மாறியது.
இந்த IDBI வங்கியின் நிதி நிலையை வலுப்படுத்த, இந்திய அரசு (GOI) மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஆகியவை பலநேரங்களில் நிதியுதவி வழங்கவேண்டிய சூழல் இருந்தது. இப்படி நிதி உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், வாராக்கடன்கள் மற்றும் சில இழப்புகள் ஏற்பட்டன. அதன் காரணமாக IDBI வங்கியை Prompt Corrective Action (PCA) எனப்படும் உடனடி சீர்திருத்த நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் ரிசர்வ் வங்கி (RBI) கொண்டுவந்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர், 2021 மார்ச் மாதத்தில் ரிசர்வ் வங்கி இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கியது.
IDBI வங்கியின் அடுத்தகட்ட மாற்றம்
தற்போது IDBI வங்கி மீண்டும் ஒரு புதிய மாற்றத்திற்காக தயாராகி வருகிறது. அது ஒரு வெளிநாட்டு வங்கியாக மாறுவதற்கான வழி தற்போது கிடைத்துள்ளது. இந்திய அரசின் 30.48 சதவீதப் பங்குகள், LIC-யின் 30.24 சதவீதப் பங்குகள் என மொத்தம் 60.72 சதவீதப் பங்குகளை Fairfax நிறுவனத்திற்கு விற்பனை செய்ய இறுதிக்கட்ட வேலைகள் நடந்துவருகின்றன. இந்த பங்குகளை பிரேம் வாட்சாவுக்குச் சொந்தமான Fairfax நிறுவனம் வாங்கவுள்ளது. இந்தப் பங்கு விற்பனையின் மூலம் இந்திய அரசும் LIC-யும் இணைந்து ரூ.52,878 கோடியைப் பெறவுள்ளன. இந்திய நிதித் துறையில் இதுவரை நிகழ்ந்த மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரவாக இது அமையவுள்ளது.
இந்தப் பரிவர்த்தனைக்குப் பிறகும்கூட, இந்திய அரசு 15 சதவீதப் பங்குகளையும், LIC 19 சதவீதப் பங்குகளையும் தங்கள் வசம் வைத்திருக்கும். மேலும், இரு நிறுவனங்களும் தங்களது பிரதிநிதிகளை வங்கியின் இயக்குநர் குழுவிலிருந்து விலக்கிக் கொண்டு, சாதாரண பொதுப் பங்குதாரர்களாகத் தொடர உள்ளன.
இந்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு சரியான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஏர் இந்தியாவில் தனது பங்குகளை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்ததைத் தொடர்ந்து, மோடி அரசு மேற்கொள்ளும் இரண்டாவது முக்கியமான பங்கு விலக்கல் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
இதற்கிடையே, Emirates NBD Bank P.J.S.C. வங்கியின் இந்தியக் கிளைகளை, RBL Bank Limited உடன் இணைப்பதற்கான திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இணைப்பு 2026 டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்கு முன்பாக, 2020-ஆம் ஆண்டின் இறுதியில், DBS Group Holdings Ltd.-ன் துணை நிறுவனமான DBS Bank India Limited (DBIL) உடன் லட்சுமி விலாஸ் வங்கி (LVB) இணைக்கப்பட்டது. இதேபோல, 2020-ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது மூன்று வங்கிகள் வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளன.
1990-களின் மத்தியில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB), எஸ்ஸார் குழுமத்தின் ரூயா குடும்பத்தினர் 65 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை பங்குகளை வாங்கியது பலரின் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இன்று TMB பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வங்கியாக மாறியுள்ளது. அதன் பங்குதாரர் அமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
உண்மையிலேயே, இந்திய வங்கித் துறை ஒரு மிகப்பெரிய மறுசீரமைப்பைக் கண்டு வருகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் தெளிவானவை. நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல, யார் சரியானவர் என்பது முக்கியமல்ல; எது சரியானது என்பதைக் கவனிப்பதே முக்கியம்!









