பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (Jio Platforms) பங்கு சந்தையில் இன்று பிரம்மாண்டமாக அறிமுகமானது. தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டின் போது பங்குசந்தையில் சந்தா கிடைத்ததில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் சாதனை செய்திருந்தது. அதன் பங்குகள் மும்பை பங்குச் சந்தையான BSE-யில், வெளியீட்டு விலையான ரூ.1,119-ஐ விட 21 சதவீதம் அதிகரித்து, ரூ.1,358-க்கு பட்டியலிடப்பட்டன.
ரூ.30,213 கோடி மதிப்பிலான இந்த ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு, மொத்தம் 22.19 மடங்கு சந்தா கிடைத்தது. முதலீட்டாளர்களிடமிருந்து வந்த ஏலங்களின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் கோடியைத் தாண்டியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திலிருந்து இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நிறுவனமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இருக்கிறது.
பட்டியலானதை தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஆகியவை இந்தியாவின் அதிக சந்தை மதிப்பைக் கொண்ட முதல் இரண்டு நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ.16.2 லட்சம் கோடியாகவும், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் சந்தை மதிப்பு ரூ.12.5 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.
இந்த பங்குச் சந்தை அறிமுகத்தைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஆகியவை சேர்த்து தற்பொழுது ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.28.9 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு விட ரூ.3.23 லட்சம் கோடி அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க வணிக குழுவாக மாறியிள்ளது. டாடா குழுமம் இரண்டாம் இடமும், அதானி குழுமம் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.
BSE-யில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் கடைசியாக ரூ.1,357.45-க்கு வர்த்தகமாகின.








