தமிழ்நாடும் தெலங்கானாவும் ஒன்றுக்கொன்று போட்டியாக இல்லாமல், துணையாக அமைந்திருப்பதாக தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பான CII-யுடன் இணைந்து சென்னையில் நடைபெற்ற Invest Telangana Global Summit 2026 முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், முதலீடுகளைக் கவர்வதில் மாநிலங்களுக்கு இடையே போட்டி நிலவும் சூழலில், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்துறை வலிமையைப் அவர் பாராட்டினார். மேலும், தெலங்கானாவைத் தங்களின் இரண்டாவது தாயகமாகக் கருதி தொழில்துறையினர் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“தமிநாட்டுடன் போட்டியிடுவதற்காக நாங்கள் சென்னைக்கு வரவில்லை. தமிழ்நாட்டிற்கென தனித்துவமான, வலுவான தொழில்துறைச் சிறப்பம்சங்கள் இருக்கின்றன. தெலங்கானாவுக்கும் அதன் சொந்த பலம் இருக்கின்றது. எங்களின் வளர்ச்சிப் பயணத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்ற அழைப்புடன் வந்திருக்கிறோம்” என்று டி. ஸ்ரீதர் பாபு கூறினார்.
1794-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வே பள்ளி, பின்னர் கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ந்த வரலாறு முதல், சென்னையின் ஆட்டோமொபைல் தொழில் மையம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள மின்னணுவியல் தொழில் குழுமங்கள், ஓசூரின் மின்சார இருசக்கர வாகனத் தொழில், சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் வரை தமிழ்நாட்டின் தொழில்துறைச் சிறப்புக்கள் குறித்து அவர் பேசினார்.
“நிலம் அல்லது மூலதனம் மட்டுமே தொழில்துறையை உருவாக்கிவிடாது என்பதை இந்தியாவுக்குத் தமிழ்நாடு கற்றுக்கொடுக்கிறது. கல்வியறிவு பெற்ற தொழிலாளர்களும் தன்னம்பிக்கை கொண்ட சிந்தனையாளர்களும்தான் தொழில்துறையை உருவாக்குகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூருக்குத் தாம் மேற்கொண்ட பயணங்கள் குறித்து அமைச்சர் பேசியபோது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) இந்தியப் பொருளாதாரத்தின் சிறிய பகுதி அல்ல; அவையே அதன் வலுவான அங்கம் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் தொழில்துறை அனுபவங்களை கற்றுக்கொண்டு, அதை முன்னோடியாக எடுத்துக்கொண்டு எளிதான கடன் வசதி, சந்தை வாய்ப்புகள், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் சிறு நிறுவனங்களுக்கெனத் தனிப்பட்ட தொழிற்பூங்காக்கள் ஆகியவற்றை தெலங்கானாவின் MSME கொள்கை மூலம் வழங்குவதாக அவர் கூறினார்.
தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி மற்றும் புத்தாக்கத்தில் தெலங்கானா
இந்தியாவின் இளைய மாநிலமான தெலங்கானா, இளமையும் வேகமான வளர்ச்சிக்கான முனைப்பும் கொண்ட மாநிலமாகத் திகழ்வதாக அமைச்சர் விவரித்தார்.
உலகளாவிய தொழில்நுட்ப மையமாக ஹைதராபாத் உருவெடுத்திருப்பதையும், அங்கு உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres – GCCs) வேகமாக வளர்ந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல், உலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் ஜீனோம் வேலி (Genome Valley) கொண்டிருப்பதாகவும், மாநிலத்தில் விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த உற்பத்தித் தளம் வலுப்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய புத்தாக்க நிறுவனச் சூழல்களில் ஒன்றான T-Hub குறித்தும் அவர் பேசினார்.
2047-ஆம் ஆண்டுக்கான வளர்ச்சித் தொலைநோக்குத் திட்டம்
தெலங்கானாவின் Telangana Rising 2047 தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதில், நிகரப் பூஜ்ஜிய உமிழ்வு (Zero carbon emission) இலக்குடன் உருவாக்கப்படும் பசுமை நகரமான பாரத் ஃபியூச்சர் சிட்டி (Bharat Future City), செயற்கை நுண்ணறிவு நகரம் (AI City), இந்தியாவின் முதல் பிரத்யேக மொபிலிட்டி வேலி (Mobility Valley), யங் இந்தியா திறன் பல்கலைக்கழகம், பிராந்திய சுற்றுவட்டச் சாலை (Regional Ring Road), புதிய தொழில்துறை வழித்தடங்கள், மூசி நதியைப் புதுப்பிக்கும் திட்டம் மற்றும் வாரங்கலில் உள்ள காகத்தியா மெகா ஜவுளிப் பூங்கா ஆகியவை அவர் குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் வருகின்றன.
தெலங்கானாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, அனுமதிகள் TG-iPASS மூலம் காலக்கெடுவுக்குள் வழங்கப்படும் என்றும், முதலீட்டாளர்களின் குறைகளுக்குத் துரிதமாகப் பதிலளிக்கும் வகையில் அரசு செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தமிழகமும் தெலங்கானாவும் இணைந்து செயல்பட வாய்ப்புகள்
இரு மாநிலங்களுக்கும் இடையிலான தொழில்துறை ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் அமைச்சர் பேசினார்.
மத்திய மற்றும் வட இந்தியச் சந்தைகளுக்கு எளிதில் சேவை வழங்கும் வகையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த பம்ப் உற்பத்தியாளர்கள், தெலங்கானாவில் இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்கலாம் என்றும், வாரங்கலில் கிடைக்கும் பருத்தியைப் பயன்படுத்தி திருப்பூரின் பின்னலாடைத் தொழில்முனைவோர் தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், சென்னையைச் சேர்ந்த வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள், ஹைதராபாத்தின் பொறியியல் நிபுணர்களுடன் இணைந்து மின்சார வாகனங்களுக்கான மின்னணுவியல் உதிரிபாகங்களை உருவாக்கலாம் என்றும் அவர் கூறினார்.
“தமிழ்நாடும் தெலங்கானாவும் இணைந்து செயல்படும்போது தென்னிந்தியா மேலும் வலுப்பெறும். தென்னிந்தியா வலுப்பெறும்போது இந்தியா முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
தொழில்துறைத் தலைவர்களுடன் ஆலோசனை
முதலீட்டாளர் சந்திப்பின் ஒரு பகுதியாக, அமைச்சர் ஸ்ரீதர் பாபு முன்னணி தொழில்துறைத் தலைவர்களுடன் தனிப்பட்ட ஆலோசனைகளை நடத்தினார்
மேலும், தைவான், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, இலங்கை, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் தூதரக மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, தெலங்கானாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு குறித்துப் பேசினார்.
CII சென்னை மண்டலத் தலைவர் வி. சாரி வரவேற்புரை மற்றும் நன்றியுரையாற்றினார்.
தெலங்கானா அரசின் மூத்த அதிகாரிகளான, தெலங்கானா மாநிலத் தொழில் உள்கட்டமைப்புக் கழகத்தின் (TGIIC) துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஷாங்கா, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளர் கிருஷ்ண ஆதித்யா, தொழில்துறை ஆணையர் நிகில் சக்ரவர்த்தி ஆகியோர் மாநிலத்தின் முதலீட்டு வாய்ப்புகளை விளக்கினர்.
Invest Telangana Global Summit 2026, டிசம்பர் 7 முதல் 9 வரை ஹைதராபாத்தில் உள்ள பாரத் ஃபியூச்சர் சிட்டியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









