ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு இணையசேவை பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும்நிலையில், போராட்டத்தின்போது பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி னால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்திருந்தது. அதேபோல், எலான் மஸ்க்கிடம் பேசி, starlink மூலம் ஈரானுக்கு இணையசேவை வழங்கப்போவதாக டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது” என்று தெரிவித்து உள்ளார்.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் சீனா முதல் இடத்தில இருக்கிறது. இந்த வரி அமலுக்கு வந்தால் சீனா அதிகம் பாதிக்கப்படும். ஏற்கனவே 100 சதவீத வரி அந்த நாட்டு பொருட்களுக்கு டிரம்ப் விதித்துள்ளார். அதேபோல் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி போன்ற நாடுகளும் ஈரானுடன் கணிசமான அளவுக்கு வர்த்தகம் செய்கின்றன.
2024–25 நிதியாண்டில் இந்தியா மற்றும் ஈரான் இடையேயான மொத்த வர்த்தகம் சுமார் 1.6 முதல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இருந்தது. பாஸ்மதி அரிசி, தேநீர், சர்க்கரை, மருந்துகள், இரசாயனப் பொருட்கள், வேளாண் பொருட்கள் என பலவற்றை ஈரானுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அதே நேரத்தில், ஈரானில் இருந்து இந்தியா கரிம இரசாயனங்கள், பேரீச்சம்பழம், பிஸ்தா போன்ற உலர் பழங்கள் உட்பட பலவற்றை இறக்குமதி செய்கிறது.
அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடைகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியா–ஈரான் வர்த்தகம் கடந்த ஆண்டுகளில் குறைந்துள்ளது. இருப்பினும், சாபஹார் துறைமுகம் போன்ற திட்டங்கள் மூலம் இரு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்கிறது. இந்நிலையில் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு இந்தியா உள்பட பல நாடுகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.









