அடுத்த ஆண்டு (பிப்ரவரி 7 முதல் மார்ச் 8, 2026 வரை) கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து காத்திருக்கிறது. 10வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடரை நடப்பு சாம்பியன் இந்தியா, அண்டை நாடான இலங்கையுடன் இணைந்து நடத்துகிறது.
இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில், முதல் முறையாக தகுதி பெற்ற இத்தாலி போன்ற சிறிய அணிகளும் பெரிய அணிகளுக்கு சவால் அளிக்கத் தயாராக உள்ளன. 20 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதும். ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான ‘சூப்பர் 8’-க்கு முன்னேறும்.

இந்தியாவில் சென்னை, அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, மற்றும் மும்பை ஆகிய ஐந்து முக்கிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இலங்கையிலும் கொழும்பு உட்பட மூன்று மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதிப் போட்டி, உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டங்கள் மற்றும் பாகிஸ்தான் பங்கேற்கும் நாக் அவுட் சுற்றுகள் ஆகியவை இலங்கை மண்ணில் நடத்தப்படலாம் என்ற தகவல், இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையின் கிரிக்கெட் வாரியங்களும் (BCCI & SLC) ஐசிசியும் இணைந்து இறுதி செய்துள்ள போட்டி அட்டவணை, அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








