முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி நடித்து வரும் பிரபல இந்தி டி.வி. தொடரில் முதல் முறையாக சிறப்பு தோற்றத்தில் பில்கேட்ஸ் நடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
நடிகையாக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்த ஸ்மிருதி இரானி, சமீபத்தில் மீண்டும் நடிகையாக களமிறங்கினர். ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2′ என்ற தொடரில் ‘விராணி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த தொலைக்காட்சி தொடரின் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் ஸ்மிருதி இரானி வீடியோ கால் பேசுகிறார். அப்போது “ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா” என்று ஸ்மிருதி கூற, எதிர்புறமிருந்து ஒரு குரல் “ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா” என்று சொல்கிறது. எதிர்புறமிருந்து வந்த குரல், அமெரிக்கா தொழிலதிபர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் குரல் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து பேசிய ஸ்மிருதி “அமெரிக்காவிலிருந்து எங்கள் குடும்பத்தினரோடு நீங்கள் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி” என்று கூறிவிட்டு, கேமராவை பார்த்து “விராணி குடும்பத்தினருடன் இணையபோவது யார்” என்று கேட்டு மக்களுக்கு சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இந்நிலையில், அந்த பிரபலம் பில்கேட்ஸ் என்று பல ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த தொடரில் மூன்று நாட்கள் அவர் இடம்பெறும் காட்சிகள் வருமென சொல்லப்படுகிறது. “பில் அண்ட் மெலின்டா கேட்ஸ்” தொண்டு நிறுவனம் மூலம் அவர் செய்துவரும் தொண்டுகள் குறித்த காட்சிகள் இந்த தொடரில் இடம் பெறுமென சொல்லப்படுகிறது.
மிகவும் பரபரப்பாக இயங்கும் பில்கேட்ஸ் இந்திய தொடரில் நடித்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக அமெரிக்காவின் பிரபல டி.வி. தொடரான ‘தி பிக் பேங்க் தியரி’ என்ற நிகழ்ச்சியிலும் பில்கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.








