ORS என்ற பெயரில் விற்கப்படும் பானங்களில், உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த பார்முலா இல்லையென்றால், ‘ORS’ என்று குறிப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை விதிப்பதற்கு சட்ட போராட்டம் நடத்திய மருத்துவர் சிவரஞ்சனி எமோஷனலாக வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வருகிறது.
பெரியவர்கள், சிறியவர்கள் என யாராக இருந்தாலும், வயிற்றுப்போக்கு வாந்தி போன்றவை ஏற்பட்டால் அவர்களுக்கு உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்க, உடனடியாக ORS வழங்கப்படும்.
ஒரு ORS பொட்டலத்தின் 20.5 கிராம் மொத்த எடையில் 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ், 2.9 கிராம் டிரைசோடியம் சிட்ரேட், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு ஆகியவை உள்ளன. ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பிறகு, ஓஆர்எஸ் பொடியை அந்த நீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆனால், 24 மணி நேரத்துக்குள் இதை பயன்படுத்த வேண்டும். இது WHOவின் பரிந்துரை.
இந்த ORS பொடியாகவும் திரவமாகவும் விற்பனையாகி வருகிறது. திரவமாக விற்பனை செய்யப்படும் ORSகளில் பலவற்றில் WHO பரிந்துரைத்த பார்முலாவில் கொடுக்கப்பட்டுள்ள அளவைவிட 10 மடங்கு அதிக சர்க்கரை இருப்பதாகவும், அவற்றால் சிலருக்கு உடல்நிலை மேலும் மோசமடைவதாகவும் மருத்துவர் சிவரஞ்சனி, கடந்த 2022 ஆம் ஆண்டு தெலங்கானா உயநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ORS அல்லாத எலெக்ட்ரோலைட் பானங்களின் டெட்ரா பேக்குகளில் ORS என்று குறிப்பிட தடைவிதிக்கவேண்டுமென முறையிட்டார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிவரஞ்சனியின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணைய ஆணையத்திற்கு (FSSAI) உத்தரவிட்டது. அதன்படி, ORS அல்லாத எலெக்ட்ரோலைட் பானங்களில் “NOT AN ORS” என்று குறிப்பிடவேண்டுமென தற்காலிகமாக FSSAI உத்தரவிட்டது. ஆனாலும் சில நிறுவனங்கள் தங்கள் பெயரிலேயே ORS என்று வைத்துக்கொண்டு, டெட்ரா பேக்கின் ஓரத்தில் சின்ன எழுத்துகளில் ‘not an ors’ என்று குறிப்பிட்டிருந்தன. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவுற்று, இனிமேல் எந்த நிறுவனமும் ‘ORS’ என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று FSSAI உத்தரவிட்டுள்ளது.
FSSAIன் இந்த உத்தரவு, தனது 8 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மருத்துவர் சிவரஞ்சனி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், தன்னுடைய இந்த போராட்டத்தில் துணை நின்ற ஊடகங்கள், மருத்துவர்கள், நண்பர்கள் என பலருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.









