பொது

இந்தியா-கனடா உறவில் புதியத் துவக்கம்!

இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவுகள், 2023 செப்டம்பரில் ஏற்பட்ட பெரும் விரிசலுக்குப் பிறகு, தற்போது ஒரு புதிய நல்ல துவக்கத்திற்கான அறிகுறி தெரிய ஆரம்பித்துள்ளது.

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதக் குழுவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் 2023 ஜூன் மாதம்  மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கனடாவின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டை இந்தியா உடனடியாக மறுத்தது, இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் தூதுவரை வெளியேற்றின. இந்தியாவிலிருந்து கனடாவுக்கு படிப்பு மற்றும் வேலைக்காக செல்லும் இளைஞர்கள் ஒருமித பயம் காரணமாக தவிர்க்க ஆரம்பித்தனர். இதனால் விசா சேவைகளும் பாதிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இருந்து வந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்புகளும் முடங்கின. இந்தநேரம் பார்த்து கனடாவில் அரசியல் சூழல் மாறியது. ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். பொருளாதார வல்லுநரான மார்க் கார்னி 2025 மார்ச் மாதம் கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

புதிய பிரதமர் கார்னி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அனிதா ஆனந்தை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்தார். இவர் கனடாவின் முதல் இந்திய வம்சாவளி வெளியுறவுத் துறை அமைச்சர் ஆவார்.

பிரதமர் கார்னி தலைமையிலான புதிய அரசாங்கம், இந்தியாவுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள தயாரானது. இதன் ஒரு பகுதியாக, இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களின் தூதுவர்களை மீண்டும் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

சமீபத்தில், கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த், தனது முதல் அதிகாரப்பூர்வ அரசு பயணமாக இந்தியாவுக்கு 13 அக்டோபர் 2025 வந்தார். அப்போது அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்து பேசினார். அவர் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி மாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இது கடந்த காலப் பிரச்சனைகளை மறந்து, ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க இரு நாடுகளும் தயாராகிவிட்டதாகவே இருநாட்டு அரசியல் நோக்கர்களும் வர்ணிக்கிறார்கள்.

Related Posts