கடந்த ஒரு வாரமாக இணையத்தில் எங்கு திரும்பினாலும், ‘ரோஜா.. ரோஜா’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பார்ப்பதற்கு மிக எளிமையாய் இருக்கும் ஒரு இளைஞர், தன் கண்களில் பாவனையுடன், உடலில் சிறு அசைவுடன், இந்த பாடலை பாடுகிறார். இசைப்புயல் AR ரஹ்மான் இசையில், பாடகர் உன்னிகிருஷ்ணன் பாடிய , ‘ரோஜா ரோஜா’ பாடலை, முகத்தில் சலனமே இல்லாமல், அசால்டாக அந்த இளைஞர் பாடியிருப்பது பலரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அந்த இளைஞர்தான் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் சத்யன் ராமலிங்கம்.
1999 ஆம் ஆண்டு, ‘சாதக பறவைகள்’ என்ற இசை குழு நடத்திய நிகழ்ச்சியில், ‘ரோஜா ரோஜா’ பாடலை சத்யன் மஹாலிங்கம் பாடியிருக்கிறார். சமீபத்தில் அந்த வீடியோவை அந்த இசைக்குழு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது. யாரும் எதிர்பாராக வகையில் அந்த வீடியோ வைரலாகி, பலரும் சத்யனை பாராட்டிவருகின்றனர். குறிப்பாக பெண்கள் அவரை புகழந்து பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். “இப்படியொரு குரல் வளம் கொண்டவரை ஏன் தமிழ் சினிமா தவறவிட்டது?” என பலர் பதிவிடுகிறார்கள்.
மக்களின் இந்த பேரன்பால் சத்யன் மஹாலிங்கம் திக்குமுக்காடி போயிருக்கிறார். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் சத்யன், இந்த வீடியோ வைரலானது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மீண்டும் ‘ரோஜா ரோஜா’ என்ற பாடலை ஓரிரு வரிகள் பாடியிருக்கிறார். மேலும், “எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என்னிடம் வார்த்தைகளே இல்லை. இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யவதென தெரியவில்லை. ரொம்ப நன்றி!”என்று அந்த வீடியோவில் சத்யன் தெரிவித்துள்ளார்.
2019-20 காலகட்டத்தில், கொரோனா நோய்த் தொற்று பரவலின் போது பல்வேறு மேடை மெல்லிசை இசைக் கலைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வந்தனர். அப்போது அவர்களுக்கு உதவும் விதமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாடல்களை பாடி அதில் வரும் நன்கொடையை தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்திற்கு வழங்கினார். 3 மாதங்கள் பாடி கிட்டதட்ட 16 லட்சம் ரூபாயை நன்கொடையாக திரட்டி, அவற்றை பிரித்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மேடை மெல்லிசை கலைஞர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தினார்.
சத்யன் 100க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். 2017ல் வெளியான ‘விழித்திரு’ என்ற படத்திற்கு இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். வசூல் ராஜா MBBS, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், சில் சில் மழையே, குட்டி புலி கூட்டம், கனவிலே கனவிலே, தீயே தீயே உட்பட பல பாடல்களை பாடியிருக்கிறார்.








