பொது

சட்டவிரோத குடியேறிகள் அல்ல… மத்திய அரசு அறிவிப்பு!

இந்த ஆண்டு வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதில், வறுமை காரணமாக இலங்கையில் இருந்து வந்த குடும்பம் இங்கு வாழ சந்திக்கும் சவால்களை படம் மூலம் நமக்குக் காட்டியிருந்தார் புதுமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இந்த திரைப்படம் வெற்றிபெற காரணம், நம்மோடு emotional Connect ஆனதுதான்.

இப்படி தான் உண்மையில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு குடிபெயரும் இலங்கை தமிழர்கள், இந்தியாவில் வாழ பல சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்கு. தற்பொழுது இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏன் இலங்கை தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வர வேண்டியிருந்தது?. 1980 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் வெடிக்கத் தொடங்கியது. அந்நாட்டில் சிங்களப் பெரும்பான்மையினருக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையிலான இன ரீதியான முரண்பாடுகள் அதிகரித்தன. காலப்போக்கில் அது கலவரமாக மாறியது. 1958, 1977 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் இனக்கலவரம் மிக மோசமடைந்தது. இதற்கு பிறகு தங்கள் உயிர்களை காக்க இலங்கை தமிழர்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.

இதில் அதிகமானோர் தமிழ்நாட்டிற்கு வந்து அங்குள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். குறிப்பாக திருச்சி, ஈரோடு, சேலம், மதுரை மற்றும் கரூர் போன்ற இடங்களில் அதிக மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1970களுக்கு முன் இந்தியா வந்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்குப் பிறகு வந்தவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகள் எழுந்தன. இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்தன.

இந்நிலையில், மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 2015 ஜனவரி 9 ஆம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்கு வந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், சட்டபூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும், இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

Related Posts