மஹாராஷ்டிராவில், சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே தலைமையில் கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்த மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே, கடந்த மாதம் 29ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். மராத்தா சமூகத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென அம்மாநில அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், தகுதி அடிப்படையில் மராத்தாக்களுக்கு குன்பி ஜாதி சான்றிதழ் வழங்கி, அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியிருந்தார்.
ஜராங்கேவின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு மும்பையில் குவிந்தனர். இதனால் அப்பகுதியின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம், மும்பை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
போராட்டம் நடக்கும் ஆசாத் மைதானத்தை தவிர, ஆக்கிரமிக்கப்பட்ட மற்ற இடங்களிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என உயர் நீதிமன்றத்திம் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த காலக்கெடு நேற்று நண்பகலுடன் முடிவுக்கு வந்தது. உயர் நீதிமன்றத்தின் உதரவை பின்பற்றுமாறு, போராட்டக்காரர்களிடம் மனோஜ் ஜராங்கே கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், போராட்ட பந்தலில் இருந்த ஜராங்கேவை சந்தித்து, மஹாராஷ்டிரா அரசின் கேபினட் துணைக்குழு மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இடஒதுக்கீடு கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக தீர்மானமும் நிறைவேற்றியது. இதையடுத்து, மனோஜ் ஜராங்கே தன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ”ஜராங்கேயின் கோரிக்கைகளில் உள்ள சட்டச் சிக்கல்களை அவருக்கு விளக்கினோம். ஒட்டுமொத்த மராத்தா சமூகத்தினரும் இல்லாமல், தகுதிவாய்ந்த நபர்கள் மட்டுமே குன்பி பிரிவில் சேர்க்கப்பட முடியும் என்பதை தெளிவுபடுத்தினோம். அரசியல் களத்தில் விமர்சனங்கள் வருவது இயல்பு; ஆனால், அது நம்மை தடுக்கக் கூடாது. மராத்தா சமூகத்திற்கு நீதி வழங்குவதே எனது நோக்கம்” என்றார்.







